பிரச்னை ஒன்று; வழக்கு மூன்று அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்ற நடைமுறைகளை தவறாக பயன்படுத்தி, மூன்றாவது முறை வழக்கு தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. ரா மேஸ்வரம் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: ராமேஸ்வரம் காமராஜ் நகரில் குறிப்பிட்ட சர்வே எண்களில் வண்டிப் பாதையாக வகைப்படுத்தியுள்ள பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினார். அதை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பட்டா வழங்க ராமேஸ்வரம் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் சாதிக் ராஜா, ராமேஸ்வரம் நகராட்சி தரப்பு வழக்கறிஞர் சரவணன் ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வண்டிப்பாதை சொத்து தொடர்பாக நகராட்சி கமிஷனர் 2023 ல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், தங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மற்றவர்களுடன் சேர்த்து ஏற்கனவே 2 முறை மனுதாரர் வழக்கு தொடர்ந்தார். தற்போது இது மூன்றாவது சுற்று வழக்கு. ஏற்கனவே இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'அச்சொத்து வண்டிப் பாதை. அது பொதுப் பயன்பாட்டில் உள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை மனுதாரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த உண்மை நிலவரத்திற்கு எதிராக எந்த ஆதாரத்தையும் மனுதாரர்கள் தரப்பில் சமர்ப்பிக்கவில்லை. ஆக்கிரமிப்பை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்' என உத்தரவிட்டது. அந்த உத்தரவில் பிழைகள் உள்ளன. அதற்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்கிறார் மனுதாரர். இதுபோன்ற சூழ்நிலையில் அம்மனு அடிப்படையில் தீர்வு காண வேண்டும். பதிலாக, ஏற்கனவே தாக்கலான வழக்குகளில் கேட்ட அதே நிவாரணத்தைக் கோரி தற்போது மனு தாக்கல் செய்துள்ளார். மனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்கள். அதே காரணத்திற்காக மீண்டும், மீண்டும் மனு செய்வது நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகும். தொந்தரவு செய்யும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். தொகையை உயர்நீதின்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தர விட்டனர்.