உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவு; த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு பாதிப்பு

கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவு; த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு பாதிப்பு

மதுரை : தமிழகத்தில் பொது இடங்களில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவால் த.வெ.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பாதிக்கப்படுவதாக அதன் மாநிலப் பொதுசெயலாளர் ஆனந்த் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்றுமாறு ஜன., 27ல் மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி உத்தரவிட்டார்.இதை எதிர்த்து மா.கம்யூ., மாநிலச் செயலாளர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.சவுந்தர், ஆர்.விஜயகுமார் அமர்வு, ''இவ்வழக்கில் கருத்துகளை தெரிவிக்க விரும்பும் கட்சிகள் ஆக.,5 க்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை கொடிக் கம்பங்கள் அகற்றுவதில் தற்போதைய நிலை தொடர வேண்டும்'' என விசாரணையை ஆக., 6க்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் தாக்கல் செய்த இடையீட்டு மனு:அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்ப, சட்டப்பூர்வமாக கொடிக் கம்பங்களை நிறுவி வருகின்றனர். ஆனால் உயர்நீதிமன்றத் தடை உத்தரவால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. குறிப்பாக த.வெ.க., கடுமையான பாதிப்பை சந்திக்கிறது. எனவே கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் த.வெ.க.,வையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை