உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழங்காநத்தம்-திருநகர் ரோடு பணி தாமதம்

பழங்காநத்தம்-திருநகர் ரோடு பணி தாமதம்

மதுரை : மதுரை பழங்காநத்தம் - திருநகர் இடையே நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி சமீப நாட்களாக தாமதமாவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.பழங்காநத்தம் - திருநகர் இடையே 6 கி.மீ., நெடுஞ்சாலையை ரூ.40 கோடியில் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரோட்டோர ஆக்கிரமிப்புகள் சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டு விரிவாக்கப் பணி நடந்தது. பின்னர் கழிவுநீர் கால்வாய்களை முறைப்படுத்துதல், மின்கம்பங்களை அகற்றுதல் என பணிகள் நடந்தன.இதில் திருநகர் பகுதியில் ரோட்டை அகலப்படுத்தி தார் ரோடு அமைக்கப்பட்டது. இங்கு ஒன்றிய நிர்வாகத்திற்கான வணிகவளாகம் மட்டும் விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருந்தது. அதனை அகற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் அப்பகுதியில் தாமதம் ஏற்பட்டது.அதேபோல பழங்காநத்தம் பகுதியில் விரிவாக்கப் பணியில் மின்கம்பங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் பணிகள் அவ்வப்போது தடைபட்டு, சமீப நாட்களாக வேகமெடுத்தது. ரவுண்டானாவில் இருந்து பைகாரா வரை தார் ரோடு அமைக்கப்பட்டது. இங்கும் சமீப நாட்களாக தடைபட்டதால் ரோட்டில் புழுதிப்படலம் தாண்டவமாடியது. பொதுமக்கள் சிரமப்பட்டதால், நெடுஞ்சாலைத் துறையினரே லாரி மூலம் தினமும் தண்ணீர் தெளித்து சிரமத்தை குறைத்தனர்.இப்பணியின்போது தார் கலவையை செக்கானுாரணி அருகே ஓரிடத்தில் தயார் செய்து லாரிகளில் கொண்டு வந்து பணியாற்றினர். சிலநாட்களுக்கு முன் அங்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பணியில் சுணக்கமானது. இதனால் கடந்த வாரம் தார் ரோடு பணி நடக்கவில்லை. இப்பிரச்னை விரைவில் சரிசெய்து ஓரிரு நாளில் மீண்டும் பணி துவங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி