உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., குறித்து மட்டுமே பேச பழனிசாமி முடிவு

நாளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., குறித்து மட்டுமே பேச பழனிசாமி முடிவு

மதுரை: சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நாளை(நவ., 5) நடக்கவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் விவகாரத்தை தவிர்த்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.,) குறித்து மட்டுமே பேச பொதுச்செயலாளர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என கெடு விதித்ததோடு, தேவர் ஜெயந்தியன்று பன்னீர்செல்வம், தினகரனுடன் இணைந்து முத்துராமலிங்கத்தேவருக்கு செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். அவரை அ.தி.மு.க.,விலிருந்து பழனிசாமி நீக்கினார். இதைதொடர்ந்து கோடநாடு கொலை விவகாரம், குடும்ப அரசியல் என பழனிசாமிக்கு எதிராக பேசி செங்கோட்டையன் நெருக்கடி கொடுத்து வருகிறார். தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார். இச்சூழலில் நாளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பழனிசாமி தலைமையில் சென்னையில் நடக்க உள்ளது. செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசுவதற்காகதான் இக்கூட்டம் என தகவல் வெளியானது. இதை கட்சியின் மூத்த நிர்வாகிகள் மறுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசி அவரை பெரிய ஆளாக்க பழனிசாமி விரும்பவில்லை. நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க., கையில் எடுத்து விளையாடும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) குறித்து மட்டுமே விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே கட்சி சார்பில் மாவட்ட அளவில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் நடக்கவுள்ள 'எஸ்.ஐ.ஆர்.,' களப்பணியில் வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்களா என கண்காணிக்க அலுவலர்களுடன் தி.மு.க., கூட்டணி கட்சியினர் செல்ல உள்ளனர். அ.தி.மு.க., தரப்பிலும் சென்று தி.மு.க.,வினரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஓட்டு வங்கி பாதிக்காத வகையில் களப்பணி நடக்கிறதா என மாவட்ட செயலாளர்கள் கவனிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இவ்வாறு கூறினர்.

அன்று கை துாக்கியவர்

இன்று கை கழுவப்பட்டார்

பழனிசாமி, பன்னீர்செல்வம் தலைமையில் இரட்டை தலைமையில் அ.தி.மு.க., செயல்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து பேச்சு எழுந்தது. அப்போது யார் யார் ஆதரவு தெரிவிக்கிறீர்கள் என கேட்டபோது, முதல் ஆளாக ஒற்றை தலைமைக்கு கை துாக்கியவர் செங்கோட்டையன். அன்று பன்னீர்செல்வத்திற்கு எதிராக முதல் ஆளாக கை துாக்கியவர், இன்று ஆதரவாக செயல்படுவது அரசியலில் அவரது நிலையற்ற தன்மையை காட்டுவதாகவும், பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து காய் நகர்த்தி வந்ததாலும் கட்சியில் இருந்து கை கழுவப்பட்டார் என்கின்றனர் அ.தி.மு.க.,வினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை