உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் பழனிசாமி 4 நாள் சுற்றுப்பயணம்; விஜய் மாநாடு காரணமாக கூடுதல் முக்கியத்துவமா

மதுரையில் பழனிசாமி 4 நாள் சுற்றுப்பயணம்; விஜய் மாநாடு காரணமாக கூடுதல் முக்கியத்துவமா

மதுரை : மதுரையில் த.வெ.க., 2வது மாநில மாநாடு நடந்த நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி செப்.,1 முதல் 4 வரை மதுரையிலேயே முகாமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அ.தி.மு.க., ஓட்டுகளை குறிவைத்து விஜய் பேசியதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், விஜய்யின் 'இமேஜை' உடைக்கும் வகையிலும் பழனிசாமியின் சுற்றுப்பயணம் அமைய உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக பழனிசாமி 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 3 கட்ட பயணம் முடிந்த நிலையில் செப்.,1 முதல் 13 வரை 4ம் கட்ட பயணத்தை மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். செப்.,1ல் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் தொடங்கி திருமங்கலம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி செல்கிறார். செப்.,2ல் மேலுார், மதுரை கிழக்கு, மதுரை நகர், செப்.,3ல் மதுரை நகர், செப்.,4ல் சோழவந்தான், உசிலம்பட்டியில் பேசுகிறார். செப்.,5,6,7 ல் தேனி, திண்டுக்கல்லில் சுற்றுப்பயணம் செல்கிறார். அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தென்மாவட்டங்களில் பழனிசாமி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இரண்டாம்கட்ட பயணத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் இடம்பெற்ற நிலையில் மதுரை, திண்டுக்கல், தேனி இடம்பெறவில்லை. 3ம் கட்டத்திலும் இடம்பெறவில்லை. செப்.,4ல் மதுரையில் மாநாடு நடத்தபோவதாக பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதை 'பிசுபிசுத்து' போக செய்யும் வகையில் செப்.,4ல் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பழனிசாமி திட்டமிட்டிருந்தார். இச்சூழலில் மதுரையில் விஜய் மாநாடும் நடந்ததால் இருவருக்கும் பதில் சொல்லும் வகையில் சுற்றுப்பயணத்தை பழனிசாமி அமைத்துள்ளார். நேற்றுமுன்தினம் விஜய் மாநாடு முடிந்த நிலையில் நேற்று பழனிசாமியின் சுற்றுப்பயண விபரங்களை அ.தி.மு.க., வெளியிட்டது. அதில் மதுரைக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் வகையில் 4 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. செப்.,1 முதல் ஒருவாரத்திற்கு மதுரையிலேயே முகாமிட்டு மதுரை, திண்டுக்கல், தேனியில் சுற்றுப்பயணம் செல்கிறார். அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், ''விஜய் மாநாட்டிற்காக பழனிசாமியின் சுற்றுப்பயணம் திட்டமிடப்படவில்லை. முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க., குறித்து விஜய் பேசியதற்கு பழனிசாமி உடனடியாக பதிலடி கொடுத்தார். அது மதுரையிலும் தொடரும். விஜய்யின் 'இமேஜ் டேமேஜ்' ஆகும். பன்னீர்செல்வம் நடத்தும் மாநாடு அ.தி.மு.க.,வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை