உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதலுதவி மையம் போல் பேரையூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு

முதலுதவி மையம் போல் பேரையூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு

பேரையூர்: பேரையூர் அரசு மருத்துவமனையில் வார்டுகள் எண்ணிக்கை, ஆப்பரேஷன் உபகரணங்கள், பரிசோதனை மையம், எக்ஸ்ரே என அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதி இருந்தும் 3 டாக்டர்கள் மட்டும் இருப்பதால் நோயாளிகள் பலர் வேறு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.பேரையூர் தாலுகாவாக அந்தஸ்து பெற்ற பின் 1997ல் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது முதல் மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் கட்டமைப்பு வசதி செய்யப்பட்டும் இன்னும் 'முதலுதவி சிகிச்சை மையம்' போல் தான் இதன் செயல்பாடு உள்ளது.பேரையூர் சுற்றி நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருப்பதால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் நோயாளிகள் வரை இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். 10 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் 3 பேர் தான் பணியில் உள்ளனர். இதனால் அனைத்து வசதிகளும் உள்ள இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உசிலம்பட்டி, மதுரை, தேனி, திருமங்கலம் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுகின்றனர். ஆப்பரேஷன் தியேட்டர் ஒரு காட்சி பொருளாக உள்ளது.துாய்மை பணியாளர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. போதிய எண்ணிக்கையில் செவிலியர் இல்லை. பிரேத பரிசோதனை கூடம் இல்லாததால் உடற்கூறு செய்ய உசிலம்பட்டி அல்லது திருமங்கலம், மதுரைக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளதால் போலீசாருக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. காவலாளி இல்லாததால் இரவு பணியில் இருக்கும் ஒரே ஒரு செவிலியர் அச்சத்தில் உள்ளார். காலை 9:00 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை மட்டுமே டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மற்ற நேரங்களில் பணியில் இருக்கும் ஒரு செவிலியர் உள்நோயாளிகளுக்கும், வெளிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கிறார்.மாவட்ட நிர்வாகம் இம்மருத்துவமனையை ஏனோ கண்டு கொள்வதில்லை. சுகாதாரத்துறை கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள், காவலாளியை நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி