ஆம்புலன்ஸ் பாதையில் நிற்கும் பஸ்க ளால் தவிக்கும் நோயாளிகள்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் நிறுத்தப்படும் பஸ்களால் அவசர காலத்தில் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மதுரையிலிருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. டவுன் பஸ்களை அதற்கான 'ரேக்'குகளில் நிறுத்துவதில்லை. அங்கு டூவீலர், கார், வேன்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த பஸ் ஸ்டாண்ட் வழியாக தான் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் பஸ்கள் நிறுத்தக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வெள்ளை கோடுகள் கடந்த 2022ல் வரையப்பட்டன.வாகன நிறுத்தமாக பஸ் ஸ்டாண்ட் மாறிவிட்டதால் டவுன் பஸ்கள் ஆம்புலன்ஸ் வழித்தடத்தை மறித்து நிறுத்தப் படுகின்றன. சமூக ஆர்வலர் கவுரிநாதன்: பஸ்கள் நிறுத்தப்படுவது குறித்து முதல்வர் தனி பிரிவிற்கு மனு செய்தேன். போக்குவரத்து கழகத்தினர் டிரைவர்களுக்கு எச்சரித்துள்ளதாக பதில் அனுப்பினர். ஆனால் பஸ் ஸ்டாண்டில் வரையப்பட்ட வெள்ளை கோடுகளும் மறைந்து விட்டன. டிரைவர்களும் வழியை மறைத்து பஸ்சை நிறுத்துகின்றனர் என்றார்.