ரூ.34 செலுத்தி ஓய்வெடுக்க மக்கள் எதிர்ப்பு
கள்ளிக்குடி; 'நுாறுநாள் வேலைத் திட்டப் பணியில் இயந்திர செல்பாடுகளுக்கு ரூ.34 செலுத்திவிட்டு, ஓய்வெடுக்க பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படையில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைகள் நடக்கின்றன. இந்த வேலைக்கு ஒரு நாளுக்கு ரூ. 220 முதல் ரூ. 270 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. கால்வாய்களை துார்வாருதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் பல்வேறு வேலைகள் தாமதமாக நடப்பதாகக் கூறி ஆட்களுக்கு பதிலாக இயந்திரங்களை வைத்து அதிகாரிகள் துணையோடு வேலைகள் நடக்கிறது. இதில் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபடும் பயனாளிகள் ஒரு நாளுக்கு ரூ. 34 கொடுக்க வேண்டும். ரூ.34 கொடுத்துவிட்டு வேலை செய்யாமல் ஓரமாக உட்கார்ந்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் ரூ. 100 கொடுத்துவிட்டு முற்றிலும் ஓய்வில் இருக்கலாம் என அதிகாரிகள் எழுதப்படாத சட்டத்தை செயல்படுத்தி வசூலில் ஈடுபடுகின்றனர். இந்த பண வசூலுக்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பணித்தள பொறுப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அதிகாரிகளிடம் பேசிவிட்டு தகவல் தெரிவிப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.