உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 85 சதவீதம் நிறைவு; மாநகராட்சி கமிஷனர் சித்ரா தகவல்

பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 85 சதவீதம் நிறைவு; மாநகராட்சி கமிஷனர் சித்ரா தகவல்

மதுரை : ''மதுரை நகர் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையிலான பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்தது. கோடையில் குடிநீர் வினியோகம் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என மாநகராட்சி கமிஷனர் சித்ரா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப் பணிகள் முடிந்த பகுதியில் ரோடுகள் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெயில் காலம் துவங்கியுள்ளதை முன்னிட்டு நகரில் உள்ள முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் வசதிக்காக கீற்று பந்தல் அமைக்கப்படும். மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது நடக்கும் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மாநகராட்சிக்கு 125 எம்.எல்.டி., குடிநீர் கூடுதலாக கிடைக்கும். இத்திட்டம் தற்போது 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வார்டுகளில் குடிநீர் வழங்கல் தொடர்பான பரிசோதனை ஓட்டம் நடக்கிறது. மேல்நிலை தொட்டிகள் இருந்தும் அவற்றில் குடிநீரை ஏற்றி வினியோகம் செய்யாமல் நேரடியாகவே வினியோகம் நடக்கிறது. கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தேவைக்கு அதிகமாக தண்ணீர் வரும் என்பதால் பழைய 44, புதிதாக கட்டப்பட்ட 37 மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகளையும் பயன்படுத்தி குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது. வீடுகளுக்கு குடிநீர் மீட்டர் இணைப்பு பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் கடைசிக்குள் பணிகளை நிறைவு செய்து முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்குவார்.குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதன் மூலம் தேவைக்கு ஏற்ப மக்கள் குடிநீரை பயன்படுத்துவர். 24 மணிநேர குடிநீர் வினியோக முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !