கருத்தடைக்கு பின் கர்ப்பம்; இழப்பீடு வழங்க உத்தரவு
மதுரை : துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பெண் மீண்டும் கர்ப்பமுற்றதால் ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனு: எனக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் மனைவிக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை நடந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதித்ததில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் அத்தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ததில் கவனக்குறைவாக துாத்துக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டுள்ளது. இழப்பீடு கோரி தமிழக சுகாதாரத்துறை செயலர், துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி வி.லட்சுமிநாராயணன்: கவனக்குறைவால் கருத்தடை சிகிச்சை தோல்வியடையவில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பு கூறியது. மருத்துவ காரணங்களை நீதிமன்றம் விரிவாக விவாதிக்க முடியாது. கருத்தடை சிகிச்சை தோல்வியடைந்தால் ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க 2022 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் மனைவிக்கு ரூ.60 ஆயிரத்தை துாத்துக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து ஏப்.17 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.