உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீதிமன்ற உத்தரவுடன் பதவியேற்க வந்த உசிலம்பட்டி நகராட்சித் தலைவி அலுவலகத்தில் போராட்டம்

நீதிமன்ற உத்தரவுடன் பதவியேற்க வந்த உசிலம்பட்டி நகராட்சித் தலைவி அலுவலகத்தில் போராட்டம்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நகராட்சித் தலைவி சகுந்தலா, தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்ற ஆணையுடன் மீண்டும் பதவி ஏற்க வந்தார். பதவியேற்க நகராட்சி நிர்வாகத்தினர் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டி நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உசிலம்பட்டி நகராட்சி தலைவராக தி.மு.க., வைச் சேர்ந்த சகுந்தலா, தி.மு.க., தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அ.தி.மு.க., விற்கு தாவினார். இந்த நிலையில் சகுந்தலா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அரசு கடந்த மார்ச் மாதம் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நகராட்சி உறுப்பினர்களின் தகுதி நீக்க உத்தரவையும் சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் ஆக. 26ல் ரத்து செய்து உத்தரவிட்டதுடன், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களது பதிலை பரிசீலனை செய்து 4 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கவும் ஆணை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவின்படி செப். 5ல் மீண்டும் பதவியேற்க வருகிறோம் என நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்திருந்தனர். அதன்படி நகராட்சித் தலைவராக பதவியேற்க, சகுந்தலா நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். தலைவர் அறையை பூட்டி வைத்துவிட்டு, நகராட்சி கமிஷனர் இளவரசன் வெளியே சென்றதால் பதவியேற்க முடியவில்லை. இதனால் தலைவர் அறைக்கு முன்பாக அரைமணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ