உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொடிக்கம்ப பிரச்னைகளில் வருவாய் துறையினர் மீதுமட்டுமே நடவடிக்கை இன்று மாலை ஆர்ப்பாட்டம்

கொடிக்கம்ப பிரச்னைகளில் வருவாய் துறையினர் மீதுமட்டுமே நடவடிக்கை இன்று மாலை ஆர்ப்பாட்டம்

மதுரை: அரசியல் கட்சிகளின் கொடிக்கம்ப பிரச்னையில் தங்கள் மீதுமட்டுமே நடவடிக்கை பாய்வதாக வருவாய்த்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.அரசியல் கட்சிகள் கொடிக்கம்பம் நடுவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சியினரும் இதனை பொருட்படுத்துவதில்லை. அதனால் நிகழ்ச்சிகளின்போது பிரச்னை கிளம்பி விடுகிறது.மதுரை புதுாரில் சில மாதங்களுக்கு முன் வி.சி.,கட்சியினரின் நிகழ்ச்சியில் பிரச்னை கிளம்பியது. அப்போது கிராம உதவியாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மற்றொரு நிகழ்வில் விளாங்குடியில் அ.தி.மு.க., கொடிக்கம்பம் நடும்போது அனுமதி பெறவில்லை எனக்கூறி தடுத்தனர். பின்னர் அவர்கள் கொடிக்கம்பம் நடாமல் ஒதுங்கினர். அதனால் நடவடிக்கை இல்லை. நேற்று வெளிச்சநத்தத்தில் நடந்த வி.சி.,கட்சியினர் நிகழ்ச்சியிலும், அனுமதி பெறவில்லை எனக்கூறி போலீஸ், வருவாய் அதிகாரிகள் தடுத்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவத்திலும் போதிய போலீசார் குவிக்கப்படவில்லை. வருவாய் அதிகாரிகள் மீதே நடவடிக்கை பாய்வதாக அத்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.மதுரை வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயகணேஷ் கூறியதாவது: கொடிக்கம்ப பிரச்னையில் போலீசாரே அனுமதி வழங்க வேண்டும். ஆனால் வருவாய்த் துறையினர் மீது மட்டுமே நடவடிக்கை பாய்வது வேதனைக்குரியது. சிலநாட்களுக்கு முன் மதுரை புதுார் சம்பவத்தில் கிராம உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நேற்று நடந்த நிகழ்விலும் வருவாய் அலுவலர்களே தாக்குதலுக்குள்ளாயினர்.வருவாய் ஊழியர்கள் தாக்கப்படும்போது வேடிக்கை பார்த்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். வருவாய் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு முயற்சிப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். கட்சிக் கொடியை தடுக்கும் நடவடிக்கையில் வருவாய் அலுவலர்களை ஈடுபடச் செய்வதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (டிச.9) மாலை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை