உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்டணச் சலுகையுடன் கூடுதல் ரயில்களையும் இயக்க வேண்டும் பயணிகள் வலியுறுத்தல்

கட்டணச் சலுகையுடன் கூடுதல் ரயில்களையும் இயக்க வேண்டும் பயணிகள் வலியுறுத்தல்

மதுரை : பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், கூடுதல் ரயில்களை இயக்கவும் முன்வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். நாடு முழுவதும் வரும் நாட்களில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளன. இந்நாட்களில் தென்மாவட்ட பயணிகள் சொந்த ஊர் சென்று திரும்பும் போது, டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படும். இதனை தவிர்க்கவும், ரயிலில் பயணம் செய்வதை ஊக்கப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்வோர், 'ரிட்டர்ன் டிக்கெட்'டையும் சேர்த்து முன்பதிவு செய்தால், அதன் அடிப்படை கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் சில கட்டுப்பாடுகள், கால வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. பயணிகள், சொந்த ஊர்களுக்கு அக். 13 முதல் 26 வரை பயணம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே நவ. 17 முதல் டிச.1 வரைக்குமான 'ரிட்டர்ன் டிக்கெட்'டையும் எடுக்க வேண்டும். புறப்படும் இடம், சேரும் இடம், பயணிக்கும் வகுப்பு, பயணம் மேற்கொள்வோர் பட்டியல் ஆகியவற்றில் மாற்றங்கள் இல்லாதிருந்தால் மட்டுமே மேற்கண்ட கட்டணச் சலுகை கிடைக்கும். உறுதி செய்யப்பட்டடிக்கெட்டுகளை ரத்து செய்தால் 'ரீபண்ட்' கிடையாது. பயணிகளுக்கு இடையூறு: தெற்கு ரயில்வே பயணிகள் சங்க பொதுச் செயலாளர் பத்மநாதன் கூறியதாவது: கட்டணத் தள்ளுபடி அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ராஜ்தானி, தேஜஸ், துரந்தோ, சதாப்தி, வந்தே பாரத் ரயில்களுக்கு இச்சலுகை பொருந்தாது. இச்சலுகையால் அதிகம் பேர் முன்பதிவு செய்வர். போதிய ரயில்களின்றி கதவு,கழிப்பறை அருகிலும், பெட்டியின் நடைபாதையிலும் பயணம் செய்ய நேரிடும். இதனால் முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறு ஏற்படும். பண்டிகை காலங்களில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். 'ஸ்பேர்' கோச்சுகளை ஒன்றுசேர்த்து அந்தந்த மண்டலத்தில் இருந்து சிறப்பு ரயில்களைஇயக்க வேண்டும். வாராந்திர ரயில்களை வாரம் 2 முறை இயக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ