கள்ளழகர் கோயிலில் பழமையை மீட்டெடுக்கும் திருப்பணிகள்
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளின் ஒரு பகுதியாக பழமையை மீட்டெடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. ஏப்.11 சுந்தரராஜப்பெருமாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருமண மண்டபம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி சுற்றுச்சுவர்களுக்கு பெயின்ட் அடிப்பது, பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் பைகள் தயார் செய்வது, மண்டபத்தை சுத்தம்செய்வது உள்ளிட்ட பணிகளில் 10க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக கோயில் சுவர், துாண்கள், விளக்கு எண்ணெய் படிந்துஉள்ள இடங்கள் துாய்மைப்படுத்தப்பட உள்ளது. ராமராயர் மண்டபம் உட்பட அழகர் எழுந்தருளும் முக்கிய மண்டபங்கள் 'வாட்டர் வாஷ்' செய்யப்பட உள்ளன. ஆறு மாதமாக கோபுரத்திற்கும், ராமர் சன்னதி கோபுரத்திற்கும் வர்ணம் பூசும் பணி நடக்கிறது. கோயிலில் துாண்களுடன் மண்டபங்களை இணைக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதனால் துாண்கள், அதில் உள்ள கலைநயமிக்க சிற்பங்கள் பக்தர்களின் பார்வையில் இருந்து மறைந்தன. பக்தர்கள் ரசிக்கும் வகையில் சுவர் அகற்றப்பட உள்ளது. குறிப்பாக நாச்சியார், கிருஷ்ணர், ஆண்டாள் சன்னதிகளில் இப்பணி நடக்க உள்ளது. ஆண்டாள் சன்னதியில் உள்ள கிரானைட் தளத்தை அகற்றிவிட்டு பழைய முறைப்படி கல்தளம் அமைப்பது, சக்கரத்தாழ்வார் சன்னதியின் தெற்குப்புறம் உள்ள இரண்டு அறைகளை ஒரே அறையாக்குவது உள்ளிட்ட 35 திருப்பணிகள் மேற்கொள்ளபட உள்ளன.