உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சவுராஷ்டிர சமூகத்தினர்  அரசியல் பிரதிநிதித்துவம் பெற தீர்மானம்

சவுராஷ்டிர சமூகத்தினர்  அரசியல் பிரதிநிதித்துவம் பெற தீர்மானம்

மதுரை: மதுரையில் சவுராஷ்டிரா அரசியல் நடவடிக்கைக் குழு சார்பில் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான ஆலோசனை மற்றும் தீர்மானக் கூட்டம் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., கிஷோர் குமார் தலைமையில் நடந்தது.வழக்கறிஞர் பிரஷாந்த் ஷர்மிளா பிரகாஷ் வரவேற்றார். 2026 தேர்தலில் மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல், சேலம் ஆகிய தொகுதிகளில், அரசியல் கட்சிகள் இச்சமூகத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும்.சிறுபான்மை மொழியினருக்காக ஏற்படுத்தப்பட்ட மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கி, அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இச்சமூகத்தினரால் துவங்கப்பட்ட சவுராஷ்டிர கூட்டுறவு வங்கியை தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆதரவு அளிக்க 89557 71115ல் 'மிஸ்டு கால்' பிரசாரம் துவங்கப்பட்டது.கிஷோர் குமார் பேசியதாவது: தமிழகத்தில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட சவுராஷ்டிர சமூக ஓட்டுகள் உள்ளது. கடந்த சட்டசபை, மாநகராட்சி தேர்தல்களில் இச்சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணி செய்யும் கட்சிகள், சிறுபான்மை மொழியினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். கட்சி பேதமின்றி அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம். அனைத்து கட்சிகளுக்கும் துாது குழுக்களை அனுப்ப உள்ளோம் என்றார்.நிர்வாகிகள் தினேஷ், குமரேசன், பிரபாகரன், கண்ணன், ராமதாஸ் பேசினர். முன்னதாக, முனிச்சாலை சந்திப்பில் உள்ள டி.எம்.சவுந்தரராஜன் சிலைக்கு மரியாதை செலுத்தி ஊர்வலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி