முதல்வர் தீர்வு வழங்க வருவாய் அலுவலர்கள் எதிர்பார்ப்பு 2ம் நாள் பணி புறக்கணிப்பு
மதுரை: வருவாய்த்துறையில் பணியிடங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நேற்று முன்தினம் முதல் பணிபுறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.மதுரையில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களுக்கு காலையில் வரும் அலுவலர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, வராண்டாவில் அமர்ந்து விடுகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2ம் நாளாக மாவட்ட தலைவர் கோபி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாநில தலைவர் சங்கரலிங்கம், பொதுச் செயலாளர் எம்.பி.முருகையன் தெரிவித்துள்ளதாவது: 2 நாட்களாக போராடினாலும், கடலோர மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு வாய்ப்புள்ளதால் அங்கு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுக்கு மேலான காலியிடங்களை நிரப்புதல், கடந்தாண்டு மார்ச்சில் பேரிடர் மேலாண்மைத் துறையில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்குவதற்கு தாமதமாவதால், ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.இதுபோன்ற காத்திருப்பு போராட்டம் சென்னையில் நடந்தபோது ஏற்கபட்டதாக முதல்வராலேயே அறிவிக்கப்பட்டது. ஆனால் 9 மாதங்களாக இக்கோப்பு நிலுவையில் உள்ளது. மேலும் கருணை பணிநியமனத்திற்கான உச்சவரம்பை 25 சதவீதமாக உயர்த்துதல், இரண்டாண்டு துணை கலெக்டர் பட்டியலை விரைந்து வெளியிட வலியுறுத்தியே போராட்டம் நடக்கிறது. அரசு நலத்திட்ட விழாக்கள், தேர்தல் போன்ற பணிகளுக்கு இரவு பகலாக பணியாற்றும் வருவாய்த் துறையினரின் கோரிக்கைக்கு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.