உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தற்காலிக பதவி உயர்வு வழங்கும் பட்டியலால் அரசுக்கு நிதி இழப்பு; ரத்து செய்ய வருவாய் அலுவலர்கள் எதிர்பார்ப்பு

தற்காலிக பதவி உயர்வு வழங்கும் பட்டியலால் அரசுக்கு நிதி இழப்பு; ரத்து செய்ய வருவாய் அலுவலர்கள் எதிர்பார்ப்பு

மதுரை: வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு பெறும் வி.ஏ.ஓ.,க்களுக்கு எதிராக, விதிமீறி தற்காலிக பட்டியல்படி தகுதியில்லாதோருக்கும் பதவி உயர்வு அளிப்பதால் அரசுக்கு நிதிஇழப்பு ஏற்படுகிறது. வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 30 சதவீதம், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், சுருக்கெழுத்து டைப்பிஸ்ட் போன்றோருக்கு 70 சதவீதம் இருக்கும் வகையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்படும். அதற்கேற்ப தகுதியுள்ளோர் பட்டியல் தயாரிப்பர். சில மாவட்டங்களில் கூடுதல் காலியிடங்கள் இருப்பதாகக் கூறி அதன்பின், தற்காலிக பதவி உயர்வு பட்டியலும் தயாரித்து அனுமதிக்கப்படுகிறது. இதில் விதிமுறைகள் எதையும் கடைபிடிப்பதில்லை என்று புகார் கிளம்பியுள்ளது. இதில் தகுதியில்லாதோரையும் தற்காலிக பட்டியலில் இடம்பெறச் செய்து, பதவி உயர்வு வழங்குவதால், அரசு நிதி விரயமாகிறது என வருவாய் அலுவலர்கள் புலம்புகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 2023ம் ஆண்டுக்கான 9 பேர் அடங்கிய பதவி உயர்வு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் மீண்டும் தற்காலிக பதவி உயர்வு பட்டியல் தயாரித்து 22 பேருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளனர். இதில் எவ்வித விகிதாச்சாரமும், விதிமுறைகளும் கடைபிடிக்கவில்லை. பதவி உயர்வுக்கான ஆண்டைக் கூட குறிப்பிடாமல் பதவி உயர்வு வழங்கியுள்ளனர் என்று குற்றம்சாட்டுகின்றனர். தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்க மாநில தலைவர் ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறியதாவது: சீனியர்கள் விடுப்பில் செல்லும் இடங்களையும் காலியிடங்களாக காட்டி பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதுபோல பல்வேறு மாவட்டங்களில் உள்நோக்கத்துடன் பதவி உயர்வு அளிக்கின்றனர். இதனால் கூடுதல் ஊதியம் வழங்க அரசு நிதி விரயமாகிறது. எனவே விழுப்புரம் உட்பட பிற மாவட்டங்களிலும் விதிமீறி வழங்கிய தற்காலிக பதவி உயர்வு பட்டியலையும், பதவி உயர்வையும் ரத்து செய்ய வேண்டும். காரணமானோர்மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை