மாநகராட்சியிடம் ரூ.5.90 கோடி இழப்பீடு வசூல்: உயர்நீதிமன்றம் * உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை : சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வைகை ஆற்றில் கலக்க விட்டதற்காக மதுரை மாநகராட்சியிடம் ரூ.5 கோடியே 90 லட்சம் இழப்பீடு வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தது.உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் (நீதித்துறை) தாக்கல் செய்த பொதுநல மனு: வைகை ஆற்று நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் பயனடைகின்றன. இவற்றில் வைகை பயணிக்கும் 260 கி.மீ., துாரத்தில் 177 இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளின் கழிவுகள் கலக்கின்றன. இதனால் வைகை ஆறு மாசடைகிறது. மாசுபடுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை: சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வைகையில் கலக்கவிட்டது மற்றும் போதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்காததற்காக ரூ.5 கோடியே 90 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிடக்கோரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பரிந்துரைத்துள்ளார். போதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்குமாறு தேனி, மானாமதுரை, பரமக்குடி நகராட்சிகள், திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வைகையில் கலக்கவிட்டதற்காக ஏன் ரூ.2 கோடியே 80 லட்சம் இழப்பீடு வசூலிக்கக்கூடாது என வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிபதிகள்: இந்த அறிக்கை குறித்து மார்ச் 26ல் நடைபெறும் தமிழக நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல். ஆறுகளை சீரமைத்தல் கழக கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். அதில் இறுதி செய்யப்படும் முடிவுகள் குறித்து ஏப்.,7 ல் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.