உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 10 லட்சம் தொழிலாளர்களுக்கு நான்கரை ஆண்டில் ரூ.789 கோடி

10 லட்சம் தொழிலாளர்களுக்கு நான்கரை ஆண்டில் ரூ.789 கோடி

மதுரை: மதுரையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் உள்பட 20 நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் மற்றும் மண்டல தொழிலாளர் நலத்துறை அலுவலர்களின் பணித்திறனாய்வு கூட்டம் நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை வகித்தார். கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். அரசுச் செயலாளர் வீரராகவ ராவ், தொழிலாளர்நல ஆணையர் ராமன் உட்பட பலர் பேசினர். தொழிலாளர் இணை ஆணையர்கள் ஹேமலதா, சுப்பிரமணியன், மதியசுமதி, உதவி ஆணையர் கார்த்திகேயன் பங்கேற்றனர். 105 தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, பணியிடத்து விபத்தில் மரணமடைந்த கட்டுமானத் தொழிலாளர் வாரிசுகளுக்கு விபத்து மரண உதவித்தொகை, வீடு கட்ட மானியம் உட்பட ரூ.89 லட்சத்து 79 ஆயிரத்து 320 மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணிஆய்வு நடந்தது. நான்கரை ஆண்டுகளில் மதுரை மண்டலத்தில் 20 நலவாரியங்களில் 6 லட்சத்து 78 ஆயிரத்து 672 பேர் பதிவு செய்துள்ளனர். 9 லட்சத்து 82 ஆயிரத்து 87 பேருக்கு ரூ.789 கோடியே 48 லட்த்து 48 ஆயிரத்து 670 மதிப்பிலான கல்வி, திருமணம், ஓய்வூதியம், விபத்து மரணம், ஆட்டோ மானியம் உள்நட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு தொழிலாளர் நலன், நுகர்வோர் நலச் சட்டங்களின் கீழ் 15 ஆயிரத்து 250 குறைபாடுகள் தொழிற்சாலைகளில் கண்டறியப்பட்டு ரூ.2 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரத்து 750 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 472 குழந்தைகள், வளரிளம் பருவத் தொழிலாளர்கள், 72 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்யாத 740 நிறுவனங்களுக்கு ரூ.86 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி