உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வருவாய், ஊரக வளர்ச்சித்துறைகளுக்கு வரும் ஆர்.டி.ஐ., மனுக்கள் அதிகம்

வருவாய், ஊரக வளர்ச்சித்துறைகளுக்கு வரும் ஆர்.டி.ஐ., மனுக்கள் அதிகம்

மதுரை : 'வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறைகளில் இருந்து ஆணையத்திற்கு மேல்முறையீட்டு மனுக்கள் அதிகளவில் வருகிறது'' என மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் மதுரையில் தெரிவித்தார்.மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.) குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை, மாநகராட்சி, காவல்துறையைச் சேர்ந்த 200 அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் கூறியதாவது:சரியான பதில் கொடுத்தால் ஆணையத்திற்கு மக்கள் வரமாட்டார்கள், விண்ணப்பம் குறைந்துவிடும். உங்களுக்கும், எங்களுக்கும் வேலை குறைந்து விடும். பதில் கொடுக்க வேண்டியது பொது தகவல் அலுவலரின் வேலை. மனுதாரர் நிலையிலிருந்து பொது தகவல் அலுவலர் தகவல்களை, சரியான பதிலை மனுதாரருக்கு கொடுக்க வேண்டும். கேள்விக்கு பதில் இங்கு இல்லை என கூறாமல் எங்கே கிடைக்கும் என தெளிவாக கூற வேண்டும். உங்கள் துறை சம்பந்தப்பட்ட கேள்வி இல்லை என்றால் மனுவை திருப்பி அனுப்பாமல் 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி அந்த அலுவலருக்கும் மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டும். பொது தகவல் அலுவலர் தகவல் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்கவில்லை என்றால் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு அரசுத்துறை அலுவலகம் முன்பு பொது தகவல் அலுவலரின் விபரங்கள் இடம்பெற வேண்டும். தகவல் உரிமைச் சட்ட மனுக்களுக்கு 30 நாட்களுக்குள்ளும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு 45 நாட்களுக்குள்ளும் பதில் அளிக்க வேண்டும். 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலர் பதில் தராவிட்டால் மேல் முறையீடு செய்யாமல் நேரடியாக ஆணையத்திற்கு அனுப்பலாம். புகார் மனுவாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனில் எந்நேரமும் மனுக்களை பதிவு செய்யலாம். ஆணையத்திற்கு மாதந்தோறும் சராசரியாக 300 மனுக்கள் வருகிறது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறைகளில் இருந்து ஆணையத்திற்கு மேல்முறையீட்டு மனுக்கள் அதிகளவில் வருகிறது, அடுத்ததாக போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து மனுக்கள் அதிகம் வருகிறது. அதிகாரிகள் சரியான பதிலை கொடுத்திருந்தால் ஆணையத்திற்கு மனுக்கள் வராது. சிலர் காலம் கடந்து பதில் அளிக்கின்றனர், அதுவும் தவறு என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை