| ADDED : டிச 17, 2024 04:15 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கமிஷனர் தினேஷ்குமார் பேசியதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து துாய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு அரசு உத்தரவுப்படி தினம் ரூ.754 சம்பளம், போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.,சங்க துாய்மை பணியாளர்கள் காலை 8:00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம்,பொதுச்செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.அப்போது எம்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், தினக்கூலியாக ரூ.754 வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்கள் விவகாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் நாடகமாடுகின்றன. எதுவும் செய்யவில்லை என்றார்.இதையடுத்து சங்க நிர்வாகிகளிடம் கமிஷனர் தினேஷ்குமார் பேச்சு நடத்தினார். அப்போது 'சம்பள உயர்வு, போனஸ் நிர்ணயம்பிரச்னை தொடர்பாக ஒருவாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று மதியம் 3:30 மணிக்கு உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சு வார்த்தையில் நகர்நல அலுவலர் இந்திரா, உதவிநகர்நல அலுவலர் அபி ேஷக் உடனிருந்தனர்.