உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் சஷ்டி: பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

குன்றத்தில் சஷ்டி: பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாட்களில் கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.நவ. 2ல் காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. திருவிழாவின் 6 நாட்களிலும் மதுரை, வெளியூர்களில் இருந்து வரும் பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகம், சரவணப் பொய்கை கிரிவலப் பாதையில் கழிப்பறைகளை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.கோயிலின் அனைத்து மண்டபங்களிலும் மெகா டி.வி.,க்கள் அமைத்து யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை நேரடியாக ஒளிபரப்பப்படும். மற்ற நேரங்களில் சுவாமி திரைப்படங்கள், கோயிலில் நடந்த திருவிழாக்கள் ஒளிபரப்பாகும். கூடுதல் மின் விசிறிகள், குடிநீர் வசதி, விரதம் கடைபிடிக்கும் பக்தர்களுக்கு மதியம் தேன், தினை மாவு, சர்க்கரை கலந்த பிரசாதம், மாலையில் சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, இரவில் பால் இலவசமாக வழங்கப்பட உள்ளது.தினமும் சுவாமி புறப்பாடு தவிர்த்த நேரங்களில் பக்தி கலை நிகழ்ச்சிகள், தினமும் மதியம் 2 ஆயிரம் பேருக்கு இலவச உணவு உண்டு. பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.

400 போலீசார் பாதுகாப்பு

கமிஷனர் லோகநாதன் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் குருசாமி தலைமையில் 10 இன்ஸ்பெக்டர்கள், 52 எஸ்.ஐ.,க்கள் உள்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கோயில் மண்டபங்களில் பெண் போலீசார், சரவணப் பொய்கை கிரிவலப் பாதை, நகரின் முக்கிய இடங்களில் ஆண் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, கேமரா மூலமும் கண்காணிப்பு செய்வர். தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் கோயில் முன்பும், சரவணப் பொய்கையில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளது. மாநகராட்சியின் 80 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை