| ADDED : மே 24, 2024 05:58 PM
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை மதுரை கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் முடிக்க வேண்டும். மேலும் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது. சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சை, 2020 ஜூன் 19ல் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது.ஜெயராஜ் மனைவி செல்வராணி, 'கைதான போலீசார் சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. இது விசாரணையை பாதிக்கும். மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.இது நிலுவையில் உள்ள நிலையில், கீழமை நீதிமன்றம் விசாரணையை முடிக்க அவ்வப்போது உயர்நீதிமன்றம் கால நீட்டிப்பு அளித்து வருகிறது. 2023 டிச., 19ல் மேலும் நான்கு மாதங்கள் அவகாசம் அளித்தது. செல்வராணி,' மே மாத கோடை விடுமுறையிலும் கீழமை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். விரைவில் விசாரணையை முடிக்க உத்தரவிட வேண்டும்' என மற்றொரு மனு செய்தார்.நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்து,''கீழமை நீதிமன்றம் விசாரணையை முடிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது,'' என, உத்தரவிட்டார்.