தேர்தலில் பிரதிநிதித்துவம் கோரி கட்சித்தலைவர்களுடன் சந்திப்பு சவுராஷ்டிரா சமூகத்தினர் முடிவு
மதுரை: சட்டசபை தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பில் தங்கள் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என வலியுறுத்தி, சவுராஷ்டிரா சமூகத்தினர் மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளனர். தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில் தங்கள் செல்வாக்கை காண்பித்து 'சீட்'களை பெற பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் போட்டி போட்டு மாநாடு நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் உள்ளூர் செல்வாக்கு, ஜாதி ஓட்டு அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் 'மெஜாரிட்டி' அடிப்படையில் குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்படும் நிலையில், சவுராஷ்டிரா சமூகத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருப்பதாக அச்சமூக நிர்வாகிகள் ஆதங்கப்பட்டு, மதுரையில் அரசியல் நடவடிக்கை குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இதில் மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ். சரவணன் பங்கேற்றது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உட்பட 15 மாவட்டங்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட சவுராஷ்டிரா மக்கள் வசிக்கின்றனர். 11 மாவட்டங்களில் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பவர்களாக இருக்கின்றனர். அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் சவுராஷ்டிரா சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மற்ற கட்சிகளிலும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என முடிவு செய்து 'சவுராஷ்டிரா அரசியல் நடவடிக்கை குழு' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் 'சமூகத்தின் பிரதிநிதி' என்ற அடிப்படையில் பங்கேற்றேன் என்றார். அரசியல் நடவடிக்கை குழு தரப்பில் கூறியதாவது: டிசம்பரில் அரசியல் எழுச்சி மாநாடு நடத்த உள்ளோம். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மாநாடு நடத்தினோம். ஜெயலலிதா எங்களிடம் பேசி, தேர்தலில் மதுரை தெற்கு தொகுதி ஒதுக்கினார். அதுபோன்ற சூழல் உருவாக மாநாடு நடத்த உள்ளோம். இதில் பங்கேற்கவும், கட்சிகளில் பிரதிநிதித்துவம் வழங்கவும் மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, த.வெ.க., தலைவர் விஜய் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளோம். மாநாட்டிற்கும் அழைப்பு விடுப்போம் என்றனர்.