மதுரையை ஆன்மிக சுற்றுலா தலமாக்கலாம் கருத்தரங்கில் யோசனை
மதுரை : மதுரை மடீட்சியாவில் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மன்றம் (போட்டோ) சார்பில், தலைவர் நாகமணி வசந்தன் தலைமையில் 2வது 'டிராவல் மார்ட்' கருத்தரங்கு நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துகுமார் பேசுகையில், 'இதுபோன்ற நிகழ்ச்சிகள் மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் சுற்றுலாவை மேம்படுத்த உதவும். மதுரையை ஆன்மிக சுற்றுலா மையமாக உருவாக்கி, பயணிகள் வருகையை அதிகரிக்க வேண்டும்' என்றார். உதவிச் சுற்றுலா அலுவலர் அன்பரசன் பேசுகையில், 'ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் மூலம் தமிழக சுற்றுலா துறை, சுற்றுலாவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. சுற்றுலாத் துறை சார்பில் அதன் வளாகத்தில் 'ஜல்லிக்கட்டு அரங்கம்' கட்டப்பட்டுள்ளது. பயண முகவர்கள் அதை நிகழ்வுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்' என்றார். முன்னணி பயண வர்த்தகத்தைச் சேர்ந்த 200 கண்காட்சியாளர்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300 பயண முகவர்கள் பங்கேற்றனர். செயலாளர் முத்துராமன், பொருளாளர் பூங்கொடி ஜோஸ், ஆலோசனைக் குழு தலைவர் மகேந்திரவேல் ஏற்பாடுகளை செய்தனர்.