| ADDED : ஆக 19, 2025 01:14 AM
மதுரை; பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை மதுரை மாவட்ட கிராமப்பகுதிகளில் கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கூரையில் குறைந்தபட்சம் ஒரு கிலோவாட் திறனுள்ள பேனல் நிறுவினால் ஒருநாளில் 4 முதல் 5 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதனை நிறுவ ரூ.ஒரு லட்சம் வரை செலவாகும். இதில் ரூ.30 ஆயிரம் அரசு மானியமாக தருகிறது. ரூ.1.50 லட்சம் செலவில் 2 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க ரூ. 60 ஆயிரம், ரூ.2 லட்சம் செலவில் 3 கிலோவாட் அதற்குமேல் தயாரிக்க ரூ.78 ஆயிரம் வரை மானியம் உண்டு. குறைந்தபட்சம் 15 அடிக்கு 15 அடி மேல்தளம் உள்ள வீடுகளில் இதனை அமைக்கலாம். இத்திட்டம் முழுமையாக செயல்பட்டால் மின்தேவை பெருமளவு பூர்த்தியாகி, அரசின் செலவு ரூ. பல லட்சம் கோடி மிச்சமாகும். இத்திட்டம் 2024 பிப்ரவரியில் துவங்கியபோது மதுரை மாவட்டத்தில் 2027க்குள் 15 ஆயிரம் வீடுகளில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை மாநகராட்சி பகுதியில் ஆயிரம் வீடுகளிலும், கிராம அளவில் 322 வீடுகளிலுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறியதாவது: ஒரு கிலோவாட் தயாரிக்க ரூ. ஒருலட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதில் 240 யூனிட் கிடைப்பதாக கொள்வோம். வீட்டில் 2 மாதத்தில் 300 யூனிட் பயன்படுத்தினால், அதில் நுாறு யூனிட் இலவச மின்சாரம் போக, மீதியுள்ள யூனிட்டுக்கு ரூ. 200 வரை கட்டணம் வரும். இது பெரும் சுமையாக தெரியாததால், பலர் முன்வருவதில்லை. வீடுகளுக்கு மட்டுமே இந்த மானியம் என்பதாலும் கிராமப்பகுதிகளில் இது எதிர்பார்த்த அளவு 'ரீச்' ஆகவில்லை. இதனை மழைநீர் சேகரிப்பு போல கட்டாயம் என்பன போன்ற நடவடிக்கைகளால்தான் முழுமையாக வெற்றி பெறும் என்றனர். யாருக்கு லாபமான திட்டம் // இத்திட்டம் 2 மாதங்களுக்கு 500 யூனிட் மின்நுகர்வு செய்வோருக்கு நல்ல லாபம் தரும் என அதிகாரிகள் கூறினர். அதன்படி 100 யூனிட் இலவச மின்சாரம் போக, மீதி 400 யூனிட் நுகர்வுக்கு பின்வரும் கணக்கீட்டில் செலுத்த வேண்டும். 101 முதல் 200 யூனிட் வரை ரூ.225ம், 201 - 400 யூனிட் வரை ரூ.900ம், 401 - 500 யூனிட் வரை ரூ.594 என மொத்தம் ரூ.1719 செலுத்த வேண்டும். அதேவீட்டில் ஒரு கிலோவாட் சோலார் திட்டத்தில் 240 யூனிட் மின்சாரம் தயாரித்தால், மீதியுள்ள 260 யூனிட்டுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் போக, 101 - 200 யூனிட்டுக்கு ரூ.225ம், அடுத்த 60 யூனிட்டுக்கு ரூ.180, நெட்ஒர்க் கட்டணம் ரூ.71 என மொத்தம் ரூ.476 செலுத்தினால் போதும். இத்திட்டத்திற்கு வங்கிக்கடன் வசதி உள்ளது. திட்டப்பணிகள் முடிந்த ஒரு வாரம் முதல் ஒரு மாதத்திற்குள் பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும்.