மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சுவாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் கார்த்திகாயினி உட்பட பலர் பங்கேற்றனர். திரளான மாற்றுத் திறனாளிகள் வீல்சேருடன் கூட்ட அரங்கிற்குள் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மொத்தம் 435 மனுக்கள் வழங்கப்பட்டன. அவற்றை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். அவர்கள் கூறுகையில், ''மேலக்குயில்குடி வடபழஞ்சி இலவச வீட்டுமனை பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞர் இல்ல திட்டத்தில் வீடுகட்டித் தரவேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தியவர்களுக்கு டூவீலர் லைசென்ஸ் வழங்க ஆர்.டி.ஓ., மூலம் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்'' என்றனர்.