உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவமனை கழிப்பறைக்குள் மதுபாட்டில்கள், நாப்கின்கள் அலறும் பணியாளர்கள்

அரசு மருத்துவமனை கழிப்பறைக்குள் மதுபாட்டில்கள், நாப்கின்கள் அலறும் பணியாளர்கள்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை உள் நோயாளிகளுக்கான ஆண்கள் கழிப்பறையில் மதுபாட்டில்களையும் பெண்கள் கழிப்பறையில் நாப்கினையும் திணித்துச் செல்வதால் அடைப்பு ஏற்படுகிறது. அடைப்பை அகற்றும் போது கழிப்பறைகளும் இணைப்புகுழாய்களும் சேதமடைகின்றன.குறிப்பாக ஆண்கள் அறுவை சிகிச்சை துறை, மருத்துவத்துறை உள்நோயாளிகள் வார்டில் மாதம் 2 முதல் 3 மது பாட்டில்களும் கழிப்பறை குழாய் வழியே வெளியே எடுக்கப்படுகிறது.மகளிர் உள்நோயாளிகள் வார்டில் துணி, நாப்கின், ஷாம்பூ கவர், மாத்திரை கவர், பாலிதீன் கவர், டீ கப்கள் ஆகியவை கழிப்பறை குழாய்க்குள் சிக்கி கழிவுகள் வெளியே செல்ல முடியாமல் தடுக்கிறது.துாய்மைப்பணியாளர்கள் கூறியதாவது: உள்நோயாளிகள் வார்டில் தான் இப்பிரச்னை அதிகமாக உள்ளது. பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (எஸ்.எஸ்.பி.,) வளாகத்தில் 90 சதவீதம் மேற்கத்திய கழிப்பறைகள் உள்ளன. இவற்றை நோயாளிகளுக்கு கையாளத் தெரியாமல் கழிப்பறை கோப்பையின் மேல் உட்காருகின்றனர்.கீழே இறங்கும் போது தண்ணீர்த்தொட்டியை பிடித்த படி இறங்குவதால் ஸ்குரூக்கள் கழன்று தொட்டியும் ஆட்டம் காணுகிறது. நோயாளிகளின் எடை தாங்காமல் கழிப்பறை கோப்பை உடைகிறது.மேலும் குப்பைத்தொட்டியில் போட வேண்டிய அனைத்தையும் கழிப்பறை கோப்பைக்குள் திணித்து விடுகின்றனர். ஒவ்வொரு முறையும் கழிப்பறை அடைப்பு ஏற்படும் போது பி.வி.சி., இணைப்பு குழாயை சுத்தம் செய்தால் அனைத்து குப்பையும் வெளியே வருகிறது.மதுபாட்டில்கள் உடைந்து வெளியே வரும் போது கையில் குத்தி காயம் ஏற்படுகிறது. சிலநேரங்களில் பைப் உடைந்து தண்ணீர் வார்டின் பின்பக்க சுவரில் கசிந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது என்றனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது 'மேற்கத்திய கழிப்பறைகள் இந்திய கழிப்பறைகளின் விலையை விட இருமடங்கு அதிகம். ஆனால் நோயாளிகள் அலட்சியமாக கழிப்பறையை குப்பைத்தொட்டியாக மாற்றுகின்றனர். ஆண்டுக்கு 300 கோப்பைகள் இப்படி உடைக்கப்படுகின்றன. கழிப்பறைக்குள் நாப்கினை திணிக்கக்கூடாது என்பதை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும். ஆண்கள் வார்டுகளில் வார்டு பாதுகாவலர்கள் மூலம் மதுபாட்டில்கள் உள்ளே கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை