விளாச்சேரி களிமண் பொம்மை கலைஞருக்கு மாநில விருது
திருநகர்: தமிழக அரசு கைத்திறன் வளர்ச்சி கழகம் பூம்புகார் சார்பில் மாநில அளவிலான 14 வகையான கைவினைப் பொருட்களுக்கான போட்டி சென்னையில் நடந்தது. சுடு களிமண் சிற்ப பிரிவில் மதுரை விளாச்சேரி கைவினைக் கலைஞர் ஹரி கிருஷ்ணன் தயாரித்த யானை மீது அமர்ந்த நிலையில் அய்யனார் சுடு களிமண் சிற்பம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு சிறந்த கலைஞர் விருது, ரூ.ஒரு லட்சம், 4 கிராம் தங்க பதக்கத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: எனது தந்தை ராமலிங்கம் சுவாமி சிலைகள், வீட்டு அலங்கார பொருட்கள், கோயில்களுக்கான சுவாமி சிலைகள் களிமண்ணால் தயாரித்து வருகிறார். அவருக்கு 2022 --23ல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி அரசு கவுரவித்தது. அவருடன் நானும் களிமண் சுவாமி சிலைகள், அலங்கார பொருட்கள் தயாரித்து வருகிறேன். எங்களது தயாரிப்புகள் ஒவ்வொரு வீட்டு கொலு அலங்காரத்திலும், கோயில்களிலும் அலங் கரிப்பது பெருமையாக கருதுகிறேன். எங்களது தயாரிப்புகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் விற்பனைக்கு செல்கின்றன என்றார்.