மூன்று மாதங்களாக இருளில் மூழ்கிய மாநில நெடுஞ்சாலை
மேலுார்: மேலுார் நெடுஞ்சாலை பகுதியில் ஹைமாஸ் விளக்கு பயன்பாட்டில் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.மேலுார் அரசு கலை கல்லுாரி முன்பு சென்னை, தஞ்சாவூர், தேவகோட்டை பகுதிகளுக்கு ரோடுகள் பிரிவதால் சந்திப்பு மையமாக உள்ளது. மையத்தின் நடுவில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இது மூன்று மாதங்களுக்கும் மேலாக செயல்படவில்லை. தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பயணம் செய்யும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.சமூக ஆர்வலர் சம்சுதீன் கூறியதாவது: ஹை மாஸ் விளக்கு செயல்படாததால், மேலுாரில் இருந்து வெளியேறும், ஊருக்குள் நுழையும் வாகனங்களை துாரத்தில் வரும் வாகனங்களால் கணிக்க முடியவில்லை. அருகில் வந்தபின் தெரிய வருவதற்குள் விபத்து நடந்து விடுகிறது. இந்த பகுதியில் வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிக்கின்றன. எனவே ஹை மாஸ் விளக்கை ஒளிரவிட வேண்டும் என நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஹைமாஸ் விளக்கு உடனே சரி செய்யப்படும் என்றனர்.