ஜாதி சான்றிதழ் தராததால் டிசி கேட்டு மாணவர்கள் மனு
வாடிப்பட்டி:மதுரை மாவட்டம், பரவை சத்தியமூர்த்தி நகரில், காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ் கேட்டு, அந்த ஜாதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் கடந்த, ஒன்பதாவது நாளாக தொடர் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினமும் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சத்தியமூர்த்தி நகர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை கவுரியிடம், நேற்று முன்தினம் 91 மாணவர்கள்; நேற்று சமயநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஆஷா ரமணியிடம் 34 மாணவர்களும் மாற்றுச்சான்றிதழ் கேட்டு மனு அளித்தனர்.சமுதாய சங்க பொருளாளர் கண்ணன் கூறுகையில், ''அன்றாட வேலைக்கு போகாமல் பட்டினியுடன் போராட்டத்தை தொடர்கிறோம். முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்று கிடைக்கவில்லை என்றால், எங்கள் பிள்ளைகளை கூலி வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படும்,'' என்றார்.மாணவர்கள் கூறுகையில், 'எங்களில் சிலரிடம் ஜாதி சான்று அட்டை உள்ளது. ஆனால், பள்ளியில் கேட்கும் ஆன்லைன் சான்று கிடைக்கவில்லை. அதை வழங்காததால், 'டிசி' கேட்டு மனு அளித்துள்ளோம்' என்றனர்.