உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாடக்குளம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுப்பு

மாடக்குளம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுப்பு

மதுரை: மாடக்குளம் கண்மாய் வரத்து கால்வாய், கரை பலப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக ரூ.17.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது.மாடக்குளம் கண்மாயின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 365 ஏக்கர். 167 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. கொடிமங்கலம் அருகே வைகையாற்றில் இருந்து வரும் மாடக்குளம் கால்வாயில், நாகமலை அருகே ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் குடியிருப்புகளின் கழிவுநீரும் குப்பையும் கலக்கிறது.ஒன்றரை கி.மீ. நீள கால்வாயின் இருபுறமும் கழிவுநீர், குப்பை சேர்ந்து மாடக்குளம் கண்மாயில் சேர்கிறது. கண்மாய் நிரந்தர நீர்த்தேக்கமாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியதை அடுத்து நீர்வளத்துறை சார்பில் ரூ.23 கோடியில் கரையை பலப்படுத்தும் பணி, நடைபாதை அமைக்க 2022ல் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது ரூ.17.53 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.கண்மாய் கரையை 13 அடியாக அகலப்படுத்தி 3.4 கி.மீ., நீளத்திற்கு கரையில் அரைவட்ட வடிவ பேவர் பிளாக் ரோடு, கரையின் பக்கவாட்டில் அலைகற்கள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாடக்குளம், துவரிமான், கீழமாத்துார் கண்மாய்களுக்கு தண்ணீர் தரும் வகையில் புதிதாக ரெகுலேட்டரும் அமைக்கப்படும்.ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் உள்ள கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைத்து, கழிவுநீர் வருவதை தடுப்பதுடன் கம்பிவலை அமைத்து குப்பை கொட்டாமல் தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்த 1.5 கி.மீ., கால்வாயின் இருபுற ஆக்கிரமிப்புகளை அளவிட்டு தருமாறு மதுரை மேற்கு தாலுகாவில் கோரிக்கை வைக்கப்பட்டது. வீடு, கடை உள்ளிட்ட 15 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தாசில்தார் அறிக்கை அளித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபின் ஜனவரியில் டெண்டர் விட்டு பணிகள் தொடங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை