உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிஸ்டம் சரியில்லீங்க : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சிலருக்கு மட்டும் வாய்ப்பு

சிஸ்டம் சரியில்லீங்க : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சிலருக்கு மட்டும் வாய்ப்பு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா முன்னிலையில் அதிகாரிகளை விவசாயிகள் மிரட்டும் தொனியிலும் அவமரியாதையாகவும் பேசிய நிலையில்கலெக்டர் கண்டுகொள்ளவில்லை என அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர்.கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சதீஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், வேளாண் துணை இயக்குநர் சாந்தி கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை பெறும் மனுக்களுக்கு அடுத்த புதன் கிழமைக்குள் பதில் அனுப்பாத அதிகாரிகளுக்கு 'ஷோ காஸ்' நோட்டீஸ் வழங்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: பஞ்சாயத்து யூனியன், நீர்வளத்துறை கண்மாய்களில் வனத்துறை சார்பில் நடப்பட்டுள்ள கருவேல மரங்களை தவிர மற்றவற்றை வெட்டி விற்பதற்கு வனத்துறை அனுமதி தேவையில்லை என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மற்ற கண்மாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை நீர்வளத்துறை, பஞ்சாயத்து யூனியன் சார்பில் வெட்டி ஏலமிடலாம். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் செயலர்கள் தவறான தகவல்களை விவசாயிகளுக்கு தெரிவிக்கக்கூடாது என்றார்.வாலாந்துார் ஆலைக்கரும்புகளை சக்தி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து அறுவடை செய்ய வேண்டும் என விவசாயி கேட்டபோது, இதர கரும்பு விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். 'சிலர் தனியார் ஆலைக்கு ஆதரவாக இருப்பதால் தான் அலங்காநல்லுார் அரசு சர்க்கரை ஆலையை திறக்க முடியவில்லை. ஏற்கனவே 500 ஏக்கர் கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆலையை திறப்பதே எங்கள் நோக்கம்' என்றபோது, 'நீங்களே பேசி முடிவெடுங்கள்' என்றார் கலெக்டர்.வாடிப்பட்டியில் 98 கல்குவாரிகள் உள்ளன. ஆட்கள் வைத்து பாறைகளை உடைக்காமல் இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். கொண்டையம்பட்டி மலையே காலியாகி விட்டது. கனிமவளத்துறை கண்டுகொள்ளவில்லை என்று விவசாயி தெரிவித்த போது கனிமவளத்துறை துணை இயக்குநர் நேரில் பார்வையிட கலெக்டர் உத்தரவிட்டார்.தோட்டக்கலைத்துறை, நீர்வளத்துறை, மாநகராட்சி துறை சார்பில் மனு கொடுத்த விவசாயிகள் வேண்டுமென்றே அத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் தேவையில்லாத கேள்விகள் கேட்டனர். நிதியில்லாத திட்டங்களில் வேலை செய்யவில்லை என புகார் தெரிவித்தனர். சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்ட போது கலெக்டர் முன்னிலையில் விவாதம் செய்யாமல் அதிகாரிகள் அமைதி காத்தனர். அதையே ஆதாயமாக கொண்டு கை விரல்களை நீட்டி எச்சரிப்பது போல பேசினர். இதை கலெக்டர் சங்கீதா கண்டுகொள்ளவில்லை என அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் என்ற போர்வையில் நிலமில்லாதவர்கள் கூட குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறை பேசும் போதும் கலெக்டரை புகழ்வதால், மற்ற அதிகாரிகளை திட்டும் போது கலெக்டர் கண்டுகொள்வதில்லை. எங்களைப் போன்ற விவசாயிகள் நேர்மையான கேள்வி கேட்டால் கலெக்டர் கடிந்து கொள்கிறார். மாதந்தோறும் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுவதால் இந்த 'சிஸ்டம் சரியில்லீங்க' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி