உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழங்குடியின உறைவிட பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரூ.156 கோடி செலவு ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

பழங்குடியின உறைவிட பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரூ.156 கோடி செலவு ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மதுரை:அரசு பழங்குடியினர் உறைவிட பள்ளிகளில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, 156 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டதாக, தமிழக அரசு தரப்பு தெரிவித்ததை அடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை பைசல் செய்தது. தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அருகே புளியங்குடி பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்திலுள்ள அரசு பழங்குடியினர் உறைவிட பள்ளிகளுக்கு போதிய கட்டடம், குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களின் போக்குவரத்திற்கு, வாகன வசதி செய்ய வேண்டும். குறித்த காலத்திற்குள் பள்ளிகளுக்குச் செல்ல தவறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய ஆசிரியர்களை நியமிக்க, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். வழக்கு நிலுவையில் இருந்தபோது மனுதாரர் இறந்துவிட்டார். இதை தானாக முன்வந்து விசாரிக்கும் வழக்காக மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. பழங்குடியினர் நல இயக்குநரக இணை இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையில், '2019 - -2020 முதல் 2025 - 2026 வரை அரசு பழங்குடியினர் உறைவிட பள்ளிகளில் குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறைகள் உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, 156 கோடியே 64 லட்சத்து 65,014 ரூபாய் ஒதுக்கப்பட்டது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, தொடர்ந்து நிதி அனுமதிக்கப்படுகிறது. 'பழங்குடியின மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. பணியை தனி 'போர்டல்' மூலம் அரசு கண்காணிக்கிறது. ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதிகள், 'மனுதாரர் சுட்டிக்காட்டிய குறைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மனுவை மேலும் பரிசீலிக்க தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ