மத்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சி; ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது; மதுரை கிறிஸ்துமஸ் விழாவில் உதயநிதி பேச்சு
மதுரை: தமிழகத்தில் மதம், மொழி, ஜாதி பெயரால் மத்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒருபோதும் எடுபடாது என மதுரையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசினார். மதுரையில் பெந்தகொஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் நடந்த கிறிஸ்து பிறப்பு விழாவில் அவர் பேசியதாவது: கிறிஸ்தவ கொள்கைகளுக்கும், தி.மு.க., கொள்கைகளுக்கும் வேறுபாடு கிடையாது. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை போதிக்க வேண்டும் என்பவை. உலகில் எல்லா நாடுகளிலும் ஒருவரின் பிறந்த நாள் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது என்றால் அது கிறிஸ்துமஸ் தான். ஏசுவின் வாழ்க்கை எளிமையானது. மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில் தான் இருப்பார்கள் என்பதை உடைப்பதற்காக மாட்டுக்கொட்டகையில் பிறந்தவர். சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக உயர முடியும் என நிரூபித்து காட்டியவர் அவர். அவரை போல மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி. பிறர் மீது இரக்கம் காட்ட வேண்டும் என கிறிஸ்தவம் சொல்கிறது. அதை தான் தி.மு.க., பின்பற்றுகிறது. ஆனால் மத்தியில் ஆள்பவர்கள் இரக்க உணர்வை வெளிக்காட்டுவதற்கு பதில் வெறுப்பு உணர்வை காட்டுகின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் மீது அதிக வெறுப்பை காட்டுகின்றனர். மதம், மொழி, ஜாதி பெயரால் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். இங்கு அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒருபோதும் எடுபடாது. கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது. கிறிஸ்தவத்தில், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பது. அந்த வழியில் தான் முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என்ற ஆட்சி நடத்துகிறார். ஆனால் மத்திய அரசுக்கு பகிர்ந்துகொள்வது என்றாலே பிடிக்காது. தமிழகத்தில் இருந்து அதிக வரி வசூல் செய்கிறது. அதற்கு ஏற்ப பகிர்ந்து கொடுப்பதில்லை. பிற மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது. பாதுகாப்பு அரண் சிறுபான்மை மக்களுக்கும் தி.மு.க.,வுக்குமான பந்தம் பிரிக்க முடியாதது. சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக தி.மு.க., இருக்கும். தமிழர் என்ற உணர்வோடு கிறிஸ்தவர், முஸ்லிம் என அனைவரும் பொங்கல் விழாவை கொண்டாடுவோம். இதுதான் தமிழகம். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை நம் அடையாளம். எதிர்கட்சிகள் வெறுப்பு பிரசாரத்தை புறந்தள்ளி 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம். இவ்வாறு பேசினார். அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், மதுரை பேராயர் டட்லி தங்கையா, மாமன்ற பிரதம பேராயர் டேவிட் பிரகாசம், தலைவர் எடிசன் உட்பட பல்வேறு சபை நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடையில் கேக் வெட்டி உதயநிதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார்.