பாதுகாப்பு கோரி அரசு டாக்டர்கள் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு போராட்டம் தனியார் மருத்துவமனை டாக்டர்களும் களமிறங்கினர்
மதுரை; சென்னையில் அரசு டாக்டர் பாலாஜியை அங்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில், மதுரை மாவட்ட செயலாளர் இளமாறன் கூறியதாவது:கொலை செய்யும் நோக்கத்தோடு டாக்டர் பாலாஜியை விக்னேஷ் என்பவர் குத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்து சென்றுள்ளார். இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தை கண்டித்து அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை தவிர்த்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளோம். அடுத்த அறிவிப்பு வரும் வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். டாக்டர்கள் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பலமுறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தமுறை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி நவ. 14 (இன்று) மதியம் 12:00 மணி வரை போராட்டம் தொடரும் என்றார்.தனியார் மருத்துவமனைகளிலும் இன்று புற நோயாளிகள் சிகிச்சை இருக்காது என இந்திய மருத்துவ கழக மாநில தலைவர் டாக்டர் அதுல் ஹாசன், மாவட்ட தலைவர் அழகவெங்கடேசன் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:நவ.13 மாலை 6:00 முதல் நவ.14 மாலை 6:00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவு செயல்படாது. மருத்துவ நிறுவனங்கள் பதிவு சட்டம் என்ற பெயரில் அரசு அல்லது தனியார் டாக்டர்கள் மீது புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கக்கூடாது. தனியார் மருத்துவமனைகள் மீது புகார் வந்தால் விசாரணையே இல்லாமல் மூடச் சொல்லி உத்தரவு (டி.எம்.எஸ்.) பிறப்பிக்கப்படுகிறது.முறையான விசாரணை நடத்தி தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றனர்.