உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிவில் பிரச்னையில் தனிநபர் நலன் சார்ந்த பொதுநல வழக்கு; அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

சிவில் பிரச்னையில் தனிநபர் நலன் சார்ந்த பொதுநல வழக்கு; அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

மதுரை : மதுரையில் சிவில் பிரச்னைக்காக சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தி தனிநபர் நலன் சார்ந்து பொது நல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.மதுரை உஷா மகேஸ்வரி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை எல்லீஸ் நகரில் உள்ள பொதுச் சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். சாலையை பயன்படுத்தவிடாமல் வேலி அமைக்க அல்லது தடுக்க முயற்சிக்கின்றனர். அது தனக்கும், குடியிருக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வேலி அமைக்க முயற்சிப்பதை தடுக்க நடவடிக்கை கோரி மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கீளீட் அமர்வு:மனுதாரருக்கும், இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட சில தனிநபர்களுக்கும் இடையே நிலத் தகராறு இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும் போது, ​​தற்போதைய ரிட் மனுவை எப்படி பொதுநல வழக்கு என கூறலாம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.பொதுநல வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பொது நல வழக்கிலும் தனிநபர் நலன் சார்ந்தது எதுவும் இல்லை என்பதை மனுதாரர் தரப்பில் குறிப்பிட வேண்டும்.அவருக்கு ஏதேனும் தனிப்பட்ட விருப்பம் இருந்தால், அதை அவர் வெளிப்படுத்த வேண்டும். அற்பத்தனமாக அல்லது யாரையும் தொந்தரவு செய்யும் வகையில் மனு இருப்பதாக உயர்நீதிமன்றம் கண்டறிந்தால், அபராதம் விதித்து தள்ளுபடி செய்யப்படும்.குறிப்பிட்ட நபர்களின் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்தால், யாருடைய நலனிற்காக தாக்கல் செய்யப்பபடுகிறது என்பது குறித்த விபரங்களை குறிப்பிட வேண்டும்.இது ஒரு சமூகமாகவோ அல்லது சங்கமாகவோ இருந்தால் அதன் தீர்மான நகல், மனுதாரருக்கு ரிட் மனு தாக்கல் செய்ய அங்கீகாரம் அளித்ததற்குரிய சான்று, சங்கம் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் துணை விதிகளை இணைக்க வேண்டும்.தனிநபர்களுக்கிடையிலான சிவில் தகராறுகள் அல்லது பணியாளர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு மனுவும் பொது நல மனுவாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தனிப்பட்ட ஆதாயம் அல்லது உள்நோக்கத்துடன் வழக்கு தாக்கல் செய்ததை நீதிமன்றம் கண்டறிந்தால் அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக மனுதாரர் உறுதியளிக்க வேண்டும்.எங்கிருந்தாவது பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனுதாரர் மனுவை தாக்கல் செய்தால், அவர் அதற்குரிய ஆதாரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். இச்சூழலில் இவ்வழக்கை கற்பனையிலும் மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் பொதுநல வழக்காக கருத முடியாது என்ற முடிவுக்கு வர எங்களுக்கு தயக்கம் இல்லை. தனி நபர் நலன் சார்ந்தது என்பதை நீதிமன்றம் அடையாளம் கண்டால், அபராதம் செலுத்த தயார் என இவ்வழக்கில் மனுதாரர் பிரமாண பத்திரத்தில் உத்தரவாதம் தாக்கல் செய்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தியதற்காக மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். தொகையை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், சி.சி.ஆர்.ஐ., பெரியகுளம் பெயரில் ஸ்டேட் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை