உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமைதி, பாவங்களில் இருந்து மீட்பதே கிறிஸ்துவின் பிறப்பு செய்தி

அமைதி, பாவங்களில் இருந்து மீட்பதே கிறிஸ்துவின் பிறப்பு செய்தி

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை நாம் மகிழ்வோடு கொண்டாடுகிறோம். ஆனால் இந்தாண்டு இயேசு பிறந்த 2025 வது யூபிலி ஆண்டாக இருப்பதால், அது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. விவிலியத்தில் உள்ள பதிவின்படி இயேசுவின் பிறப்புச் செய்தி முதன்முதலாக நள்ளிரவில் வயல்வெளியில் ஆடுகளுக்கு காவல் காத்த இடையர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அறிவிக்கப்பட்டது.'இன்று ஆண்டவராகிய மெசியா எனும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையை துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருப்பதை காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்'' என (லுாக்உ2:11-12) கூறப்பட்டுள்ளது. சாதாரண குழந்தைகளின் பிறப்பே கடவுளின் அன்பை நமக்கு காட்டுகிறது என்றால் கடவுள் தன்மகனையே இவ்வுலகில் பிறக்கச் செய்தது அவரது அன்பின் முழுமையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. கிறிஸ்து பிறப்பு நமக்கு தருகிற செய்தி, 'காலத்தைக் கடந்த கடவுள் மனித வரலாற்றுக்குள் ஒரு குழந்தையின்கால்கள் கொண்டு கால்பதிக்க திருவுளம் கொண்டார்'' என்பதுதான். நேரத்தைக் கடந்த நிரந்தரமானகடவுள் நேரத்திற்குத் தன்னை உட்படுத்திய நிகழ்வுதான் கிறிஸ்துமஸ்.உலகமாந்தர் அனைவருக்கும் அமைதியை தருவதாக இயேசுவின் பிறப்பு இருக்கிறது. மகிழ்ச்சியையும், அமைதியையும் நாடும் அனைவரும் கிறிஸ்துவை கண்டு கொள்வர். அவரை கண்டு கொள்பவர் அனைவரும் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற்றுக் கொள்வர். நிரந்தரமான மனஅமைதியைத் தந்து, நம் பாவங்களில் இருந்து நம்மை மீட்பதாக அமைகிறது கிறிஸ்து இயேசுவின் பிறப்புச் செய்தி.உலகெங்கும் கிறிஸ்துமஸ் குடில் அமைத்தும், விண்மீன் தோரணங்கள் அமைத்தும், இனிப்பு வெட்டியும், பரிசுகளை பகிர்ந்தும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிற அனைவரும் பாலன் இயேசுவை கண்டுணர்ந்து கொள்கிறார்களா என்பது சிந்திக்கப்பட வேண்டியது.உலக நாடுகள் பலவற்றிலும் போர், வன்முறை தலைதுாக்கி நிற்கிறது. எனவேதான் திருத்தந்தை பிரான்சிஸ், ''கிறிஸ்துமஸ் கொண்டாடினால் மட்டும் போதாது. உலக அமைதிக்காக நாம் பாலன் இயேசுவிடம் ஜெபிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளார். அனைவருடைய மனங்களிலும் மகிழ்ச்சி நிலைக்க ஜெபிப்போம்.- ச.அந்தோணிசாமிகத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்ட பிஷப்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ