வாகனம் நிறுத்துமிடமானது பஸ் ஸ்டாப்
மேலுார் : மேலுாரில் வெளியூர் பஸ் ஸ்டாப்பை மறைத்து நிறுத்தப்படும் வாகனங்களுக்குள் பயணிகள் குறுக்கு, நெடுக்காக செல்வதால் விபத்துக்குள்ளாகின்றனர்.மேலுார் தாலுகா அலுவலகம் முன்பு வெளியூர் பஸ் ஸ்டாப் செயல்படுகிறது. இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். பஸ் ஸ்டாப் முழுவதும் கனரக வாகனங்களால் ஆக்கிரமித்துள்ளதால் பஸ் ஏற முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.பயணிகள் கூறியதாவது: வெளியூர் பஸ் ஸ்டாப்பை மறைத்து மண் அள்ளும் இயந்திரங்கள், ஆட்டோ, தனியார் கல்லுாரி பஸ்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு லாரிகளை நிரந்தரமாக நிறுத்தும் இடமாக மாற்றி விட்டனர். மீன், துரித உணவு கடைகளும் ஆக்கிரமித்துள்ளன. அதனால் மதுரையில் இருந்து வரும் பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றன. அந்நேரத்தில் பஸ்சின் பின்னால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மக்கள் பஸ்களில் ஏற குறுக்கு, நெடுக்காக ஓடும்போது தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். போலீசார் பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர்.டி.எஸ்.பி., சிவகுமார் கூறுகையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.