| ADDED : பிப் 04, 2024 05:42 AM
குடும்பத்தலைவி, மலையேற்ற பயணி, சுற்றுலா வழிகாட்டி, உணவு விமர்சகர், ஊர் சுற்றுபவர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் பெங்களூருவைச் சேர்ந்த மீனாட்சி குப்தா. கர்நாடகாவில் மலையேற்றம், காஷ்மீரில் மலையேற்றம் மற்றும் இமயமலை அடிவாரம் தொட்ட அந்த பரவச நிமிடங்களை பகிர்ந்து கொண்டார்.25 ஆண்டுகளாக பயணம், எழுத்து, சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்தேன். மலையேற வேண்டும் என்ற ஆசை 47 வயதில் வந்தது. பயணம் தான் என்னை மீட்டெடுக்கும் சக்தி என உணர்ந்தேன். பெங்களூருவில் இருந்து டில்லிக்கு தனியாக விமானத்தில் பயணம் செய்தேன். டில்லியில் இருந்து காசோலுக்கு (சிம்லா) பஸ் பயணம், அங்கிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கீர் கங்காவுக்கு 111 மணி நேர டிரக் பயணம். எப்படி மலையேறுவது என மலைத்தேன். ஆனால் மலையின் சக்தி என்னை வா என்று அழைத்துச் சென்றது. வெயில் காலம் என்பதால் பனி பெய்யவில்லை. அங்கே கேம்பில் தங்கினேன். உறவுகளும் நட்புகளும் இன்றி முதல்முறை 6 நாட்கள் தனிமை பயணம் என் பலத்தை எனக்கு உணர்த்தியது. அதன் பின் அடிக்கடி மலையேற ஆரம்பித்தேன்.மலையின் ஆற்றலை உணர்ந்துள்ளீர்களா… மலையின் முன் நிற்கும் போது, 'நீ எத்தனை சிறியவள்' என்று என்னை கேட்பது போலிருந்தது. பெண்கள் எப்போதுமே நம்மை பற்றிய தாழ்வான மதிப்பீடுகளை கொண்டுள்ளனர். அதையெல்லாம் தாண்டிய மதிப்பீட்டை கற்றுத்தந்தது மலையேற்ற அனுபவம். நான் வலிமை மிக்கவள் என மலை எனக்கு உணர்த்தியது.2023 ஆகஸ்டில் பயண குழுவினருடன் காஷ்மீர் சென்றேன். ஏழு ஏரிகளை தரிசித்தோம். 14ஆயிரம் உயர மலை உச்சியை அடைந்தேன். காஷ்மீரில் ேஷான்மர் சென்றோம். 2023 அக்டோபரில் எவரெஸ்ட் பேஸ் சென்றோம். மொத்த உயரம் 29ஆயிரம் அடி. தரையிலிருந்து 18ஆயிரம் அடி உயரம் தான் எவரெஸ்ட் பேஸ் எனப்படும். அங்கே 4 நாட்கள் தங்கினேன். தண்ணீர் உறைவதைப் பார்த்துக் கொண்டே மேலே ஏறினோம். மூலிகை தாவரங்கள் புத்துணர்வையும் உற்சாகத்தையும் தந்தது. இயற்கையின் வாசத்தை சுவாசித்துக் கொண்டே சென்றது புது அனுபவம். எவரெஸ்ட் சிகரத்தின் 29ஆயிரம் அடியைத் தொட ஆசையிருக்கிறது. மலை எனக்கு சக்தியைத் தரும் என நம்புகிறேன். நம்மை குணப்படுத்தும் சக்தி மலைக்கு உள்ளது என்பதை மானசீகமாக உணர்ந்தேன். ஏனென்றால் எனக்கு தரையில் நடக்கும் போது ஆஸ்துமா, முழங்கால் வலி, ரத்தஅழுத்தப் பிரச்னை உள்ளது. மலை மேலே ஏறும் போது எதுவுமே தெரியாது. இயற்கையின் கொடை மலை என்பதால் மரியாதை செய்து தலைகுனிந்து வணங்க வேண்டும். இயற்கைக்கு மட்டுமே புதுப்பிக்கும் ஆற்றல் உள்ளதால் பயணங்கள் என்றுமே இதமானது, இனிமையானது என்றார்.