மேலும் செய்திகள்
மரங்கள் 'கொலை' தொடரலாமா?
20-Jun-2025
மதுரை: மதுரை மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ள நிலையில் அவற்றை அகற்ற வேண்டுமென விவசாயிகள் புகார் செய்கின்றனர். ஆனால் இதற்கான விலையை வனத்துறை தாமதமாக நிர்ணயிப்பதால் மரங்களை வெட்ட முடியவில்லை என்கின்றனர் நீர்வளத்துறையினர்.பெரியாறு வைகை உபகோட்டத்தின் கீழ் 220 கண்மாய்கள், மேலுார் கோட்டத்தின் கீழ் 1000 கண்மாய்கள் வரை நீர்வளத்துறையின் கீழ் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் நீர்ப்பிடிப்பு பகுதியை பாதிப்பதோடு பாசனத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் சீமை கருவேல மரங்களை அகற்றச் சொல்லி தொடர்ந்து புகார் கொடுக்கின்றனர். விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்திலும் தொடர்ந்து மனு கொடுக்கின்றனர். மரங்களுக்கான விலையை நிர்ணயிக்க வனத்துறை தாமதம் செய்வதால் மரங்களை வெட்ட முடியவில்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பயம் போகலை
இது மாநில அளவில் எல்லா மாவட்டங்களிலும் எதிரொலித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். வனத்துறை மூலம் நீர்வளத்துறை, பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்கள் நட்டிருந்தால் வனத்துறையிடம் வெட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் சீமை கருவேல மரங்களை உள்ளூர் மக்களிடமே ஏலம் விடலாம் என அரசாணையும் உள்ளது. இதை ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் கலெக்டர் அறிவித்தாலும் நீர்வளத்துறை, வனத்துறை இடையே நீயா... நானா என்ற இழுபறியே நிலவுகிறது. 28 வழக்குகள் பதிவு
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியது:
தானாக வளர்ந்த சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை அனுமதி தேவையில்லை தான். ஆனால் அந்த மரங்களுக்கான ஏல விலையை வனத்துறை தான் நிர்ணயிக்க வேண்டும். நாங்கள் வனத்துறைக்கு கடிதம் அனுப்பினால் பதில் பெற ஒரு மாதம் வரை தாமதமாகிறது. மதுரையில் எல்லா கண்மாய்களும் சங்கிலித்தொடர் முறையில் பாசன கண்மாய்களாக உள்ளன. மழை பெய்து தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விட்டால் கண்மாய்கள் நிறைந்து விடும். மறுபடியும் நீர் வற்றிய பிறகு வனத்துறை அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். கேட்டால் வேலைப்பளு என்று காரணம் காட்டுகின்றனர். சிலநேரம் அழுத்தம் கொடுத்தால் கண்மாய்களில் வனத்துறையே நட்டு பராமரிக்கும் கருவேல மரங்களுக்கு மட்டுமே விலை நிர்ணயிக்கப்படும் என்கின்றனர். இதே பிரச்னை சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் அதிகம் உள்ளது. அங்கே இதற்கென 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களிடம் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகை குறைவாக இருந்தால், வேறு யாராவது சிலர் நீர்வளத்துறைக்கு எதிராக வழக்கு பதிவதற்கு வாய்ப்புள்ளது. நாங்கள் தான் தேவையற்ற பிரச்னையை சந்திக்க வேண்டும். அதற்கு பதிலாக வனத்துறை தாமதமின்றி மரங்களுக்கான விலையை நிர்ணயித்தால் உடனடியாக அகற்ற முடியும் என்றனர்.
20-Jun-2025