| ADDED : ஜன 14, 2025 05:43 AM
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடக்கும் நிலையில், நேற்று தன் வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த மரத் தடுப்புகள் இடையூறாக இருப்பதாகக் கூறி, அதை அரிவாளால் வெட்டி அகற்றிய நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் மனைவி காளியம்மாளை போலீசார் எச்சரித்தனர்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே இடதுபுறம் வேல ராமமூர்த்தி வீடு உள்ளது. பாதுகாப்பு கருதி இருபுறமும் மரத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வேல ராமமூர்த்தியின் வீட்டை மறைத்து தடுப்பு அமைக்கப்பட்டதால், வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. ஏற்பாட்டாளர்களிடம் பலமுறை வேல ராமமூர்த்தியின் மனைவி காளியம்மாள் கூறியும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.ஆத்திரமுற்ற அவர், நேற்று மதியம் அரிவாளால் தடுப்புகளை இணைப்பதற்காக கட்டப்பட்ட கயிற்றை வெட்ட ஆரம்பித்தார். அங்கிருந்த போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் அவரை தடுத்தனர். 'வழக்கமாக முதல் நாள் மாலை தான் தடுப்பு அமைப்பர். இப்போது, இரண்டு நாட்களுக்கு முன்னரே வீட்டை மறைத்து அமைத்தால் எப்படி நாங்கள் வெளியே போவது?' என, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வீட்டில் இருந்த வேல ராமமூர்த்தி வெளியே வந்து பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்.'இது போன்ற செய்கையில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும்' என போலீசார் எச்சரித்தனர். ஆனாலும், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காளியம்மாளை, அதிகாரிகள் சமரசம் செய்தனர்.