உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழுதடைந்த கட்டடத்தில் தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷன்;    காலி செய்ய உயர்நீதிமன்றம்  அவகாசம்  

பழுதடைந்த கட்டடத்தில் தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷன்;    காலி செய்ய உயர்நீதிமன்றம்  அவகாசம்  

மதுரை: வாடகை கட்டடத்தில் செயல்படும் மதுரை தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனை 18 மாதங்களில் போலீசார் காலி செய்ய வேண்டும். கட்டடம் பழுதடைந்துள்ளதால் அவ்வளாகத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு கட்டட உரிமையாளர் பொறுப்பேற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை நகரத்தார் சங்கத்தின் தலைவர் வைரவன் தாக்கல் செய்த மனு:மதுரை தெப்பக்குளத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் சங்கத்திற்கு சொந்தமான கட்டடம் உள்ளது. அது 1908 ல் கட்டப்பட்டது. அங்கு தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட 1980 ல் வாடகைக்கு விடப்பட்டது. தற்போது கட்டடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அகற்ற வேண்டியுள்ளது. பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போலீஸ் ஸ்டேஷனை காலி செய்ய தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,மதுரை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.அரசு தரப்பு: வைகை தென்கரை சந்தைப்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷன் அமைப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மனுதாரருக்கு சொந்தமான கட்டடத்தை காலி செய்து ஒப்படைக்க, 2 ஆண்டுகள் அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: பழுதடைந்த கட்டடத்தில் மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு போலீஸ் ஸ்டேஷனை செயல்பட அனுமதித்தால், அங்கு செல்லும் மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்படும். அவ்வளாகத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு மனுதாரர் பொறுப்பேற்க முடியாது. போலீசார் 18 மாதங்களுக்குள் ஸ்டேஷனை காலி செய்து மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை மாதம் ரூ.20 ஆயிரம் வாடகை செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை