வாய் புற்றுநோயாளிகள் அதிகம்
மதுரை: இந்தியாவில் புகையிலையை வாயில் சுவைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதால் 20 சதவீத வாய் புற்றுநோய்கள் பரவுகிறது என மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் ரமேஷ் தெரிவித்தார். உலக புற்றுநோய் எதிர்ப்பு தினத்தையொட்டி அவர் கூறியதாவது: வெளிநாடுகளில் 4 சதவீத பேருக்கு தான் வாய் புற்றுநோய் பரவுகிறது. இந்தியாவில் சிகரெட், பீடி புகைப்பதே தீய பழக்கமாக பார்க்கப்படுகிறது. வாயில் புகையிலை மெல்லுவதை அவ்வாறு பார்ப்பதில்லை. எனவே கிராமப்புறங்களில் எளிய மக்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்தியாவில் வாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 சதவீதம். இதுகுறித்து அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும். வாயை திறக்க முடியாத நிலை, வாயில் ஆறாத புண் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவதன் மூலம் முழுமையாக குணமடையலாம் என்றார்.