கால்வாய் உண்டு; கலுங்கு இல்லை; குளத்துக்கு போட்டியிடும் அதிகாரிகள் எங்கே
மேலுார்: திருவாதவூர் நெட்டியேந்தல் குளம் நிறைந்து தண்ணீர் வெளியேற கலுங்கு இல்லாததால் குளம் உடைந்து பயிர்கள் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெட்டியேந்தல்குளம், 10வது பெரியாறு பிரதான கால்வாய் 4வது மடை மற்றும் மழைநீரால் நிரம்பும். அதன் மூலம் ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குளத்திற்கு தண்ணீர் வர கால்வாய் உண்டு. அதேசமயம் குளம் நிரம்பினால் தண்ணீர் வெளியேற மறுகால் கலுங்கு இல்லை. தற்போது குளம் நிரம்பி உடையும் நிலையில் உள்ளது. இக்குளத்தில் உடைப்பு ஏற்பட்டால் கொல்ல னேந்தல், மறுச்சு கட்டி, துாங்கனேந்தல் என 4 குளங்களிலும் உடைப்பு ஏற்படும். பல ஏக்கர் பயிர்கள் பாதிக்கும் அவலம் நிலவுகிறது. விவசாயிகள் கூறியதாவது: நெட்டியேந்தல் குளத்தை, வருவாய்த்துறையினர் ஏற்கனவே ஆவணத்தில் நிலமாக மாற்றினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நீர்வளத் துறையினர், ஒன்றிய அதிகாரிகள் குளம் யாருக்கு சொந்தம் என போட்டி போடுகின்றனரே தவிர, கலுங்கு கட்ட மறுக்கின்றனர். குளங்களில் உடைப்பு ஏற்பட்டால் 20 நாளான பயிர்கள் பாதிக்கும். தற்போது மழை தொடர்வதால் குளம் உடைவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட வேண்டும். கண்மாய் கரையில் மணல் மூடைகளை அடுக்கி கரையை பலப்படுத்துவதுடன், சிமென்ட் குழாய்கள் பதித்து தண்ணீரை வெளியேற்றி பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்றனர்.