நெல் சேமிப்பு கிடங்குக்கு தார்ப்பாய் வேலி பாதுகாப்பு மூடைகள் திருடுபோக வாய்ப்பு
திருமங்கலம்: கப்பலுாரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கில் 40 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்ததால், பல நாட்களாக தார்ப்பாய் வேலி அமைத்துள்ளனர். இதனால் இரவில் நெல் மூடைகள் திருடு போக வாய்ப்பு உள்ளது.இங்கு தகர கொட்டகையால் அமைக்கப்பட்டு நெல் மூடைகள் பாதுகாக்கப்படுகின்றன. இருப்பினும் போதிய இடவசதியின்றி திறந்த வெளியிலும் நெல் மூடைகளை அடுக்கி தார்ப்பாயால் பாதுகாக்கின்றனர். இந்நிலையில் கிடங்கின் பின்பகுதியில் 30 அடி நீளம் உள்ள சுற்றுச்சுவர் சில நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் பாதுகாப்பற்ற தன்மை ஏற்பட்டு உள்ளது. தற்காலிகமாக தார்ப்பாய் கொண்டு அந்த இடத்தை மூடி உள்ளனர். இரவில் கோடவுனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூடைகள் திருடு போக வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து நெல் மூடைகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.