உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இருக்கவே இருக்கு...: மதுரை விமான நிலையத்திற்கு செல்ல மாற்று வழி: பழங்காநத்தம், முத்துப்பட்டி வழியை பயன்படுத்தலாம்

இருக்கவே இருக்கு...: மதுரை விமான நிலையத்திற்கு செல்ல மாற்று வழி: பழங்காநத்தம், முத்துப்பட்டி வழியை பயன்படுத்தலாம்

மதுரை: மதுரை நகரில் இருந்து விமான நிலையம் செல்ல தெற்குவாசல் பாலம், வில்லாபுரம், அவனியாபுரம் பைபாஸ் ரோடு, பெருங்குடி வழியாக செல்ல வேண்டும். அல்லது ரிங்ரோடு வழியாக செல்லலாம். பழங்காநத்தம், பசுமலை, விராட்டிப்பத்து, பெத்தானியாபுரம் உள்ளிட்ட மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் விமானநிலையம் செல்ல பெரியார் பஸ் ஸ்டாண்டை கடந்து தெற்குவாசல் செல்வதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. அதேபோல் நகருக்குள் வருவதென்றாலும் இதே நிலைதான். தெற்கு வாசல் பாலம் 40 ஆண்டுகளை கடந்து மோசமான நிலையிலும், வாகனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி 'ஆட்டம்' காண்கிறது. இந்த ரோட்டை விரிவுபடுத்த வில்லாபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. பெருங்குடி பகுதி வரை ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தெற்குவாசல் பாலம் அருகே மற்றொரு பாலம் அமைக்க ஆய்வு நடந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் மற்றொரு பாதை இருந்தால் தெற்குவாசல் பாலப்பகுதியில் நெரிசலை குறைக்கலாம். இதற்குள்ள வாய்ப்பு பழங்காநத்தம் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்துவதே. இங்கிருந்து டி.வி.எஸ்., நகர், முத்துப்பட்டி, திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் ரோட்டை கடந்து வெள்ளக்கல் வழியாக பெருங்குடி ரோட்டில் சென்று சேரலாம். 8 முதல் 10 கி.மீ.,தொலைவுள்ள இந்த ரோட்டை அகலப்படுத்தினால் விமான நிலையம் செல்ல கூடுதலாக ஒரு ரோடு கிடைக்கும். நெடுஞ்சாலைத் துறையில் இதற்கான கருத்துரு உருவாகி பின்னர் அது கைவிடப்பட்டது. இந்த ரோட்டின் துவக்கத்தில் உள்ள பழங்காநத்தம் பாலத்தில் போக்குவரத்து குறைவாகவே உள்ளது. பாலத்தில் ஏறிச்செல்ல 100 மீட்டர் குறுகிய பாதையில் பழங்காநத்தம் நோக்கி சென்று மீண்டும் 'யு டர்ன்' அடித்து ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் பலரும் தயங்குவதால் 'அண்டர் பாஸ்' வழியாக கடந்து செல்கின்றனர். இதை தவிர்க்க பாலத்தின் குறுக்கே, கிழக்கு மேற்காக திருப்பரங்குன்றம் ரோட்டில் ஒரு பாலம் அமைத்தால் இருபுறமும் இருந்து டி.வி.எஸ்., நகருக்கு எளிதில் செல்ல இயலும். இதற்கான வாய்ப்புகளை நெடுஞ்சாலைத் துறை ஆலோசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !