உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் ஸ்டாண்டிற்கு பில்லர் போட்டாச்சு... இடிச்சாச்சு... உசிலம்பட்டியில் நடக்குது கூத்து

பஸ் ஸ்டாண்டிற்கு பில்லர் போட்டாச்சு... இடிச்சாச்சு... உசிலம்பட்டியில் நடக்குது கூத்து

உசிலம்பட்டி: திட்டமிடுதல் இல்லாமல் 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டில், முதல் தளத்திற்கு போடப்பட்ட கான்கிரீட் பில்லர்களை இடித்து வருகின்றனர். ரூ. 5 லட்சம் வரை வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் விரிவாக்கம் செய்து கட்டுவதற்காக ரூ.8 கோடியை அரசு 2023ல் ஒதுக்கீடு செய்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பஸ்ஸ்டாண்டிற்குள் கடை வைந்திருந்த 300க்கும் மேற்பட்டவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்பங்கேற்று 'இங்குள்ள பஸ்ஸ்டாண்ட் அப்படியே இருக்கட்டும். அரசு ஒதுக்கியுள்ள நிதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாற்று இடம் தேர்வு செய்து புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுங்கள்' என்றனர். இதை ஏற்காமல் அன்றயை நகராட்சி கமிஷனர், பொறியாளர் ஊராட்சி ஒன்றியம் வசம் உள்ள சந்தை திடல் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்கும் பட்சத்தில்,சந்தை திடலுக்குள் இருந்து மேலும் ஒரு ஏக்கர் சேர்த்து விரிவுபடுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் என அறிவித்தனர். அதன்படி 2023 ஜூலை பஸ் ஸ்டாண்ட் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. குடியிருப்புக்கு உகந்ததல்ல என கைவிடப்பட்ட தேனி ரோட்டில் உள்ள அரசினர் குடியிருப்பு பகுதிக்கு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இடமாற்றப்பட்டது.தொடர்ந்து பஸ்ஸ்டாண்ட் பணிகள் தரைத்தளம், முதல்தளம் என திட்டமிட்டிருந்தபடி பணிகள் நடந்தன. கூடுதலாக ஒரு ஏக்கர் இடம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் ஒரு பக்கத்தில் மட்டும் தரைத்தள பணிகள் நடந்து முதல்தளத்திற்கு 10 அடிவரை 26 பில்லர்கள் எழுப்பியிருந்தனர். இதனிடையே பஸ்ஸ்டாண்ட் பணிகளை பார்வையிட்ட உயரதிகாரிகள் முதல்தளத்திற்கு போடப்பட்டுள்ள 26 பில்லர்களையும் இடிக்க வேண்டும். உடனடியாக பஸ்ஸ்டாண்ட் தரைத்தளத்தை சரிசெய்து விரைவில் திறக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனால் பில்லர்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணம் வீண்

ராமகிருஷ்ணன், நகராட்சி கவுன்சிலர்: பஸ்ஸ்டாண்ட்டுக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கருத்துக்கேட்புக்கூட்டத்தில் புதிய இடம் தேர்வு செய்து கட்ட வேண்டும் என எங்கள் தரப்பு கருத்துக்களை பதிவு செய்தோம். அப்போதிருந்த நிர்வாகத்தினர் எதையும் கேட்காமல் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியை இடித்து புதுப்பிக்கிறோம் என வரைபடம் எல்லாம் கொடுத்தனர். தற்போது முதல் தளம் இல்லை என போட்டிருந்த பில்லர்களை இடித்து வருகின்றனர். திட்டமிடாமல் செய்யப்படும் பணிகளால் மக்களின் வரிப்பணம் வீணாவதுடன், 2 ஆண்டுகளாக பொதுமக்கள் பழைய பஸ்ஸ்டாண்ட் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் என அலைந்து வருகின்றனர். அரசு இது குறித்து விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை