உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / த.வெ.க., தொண்டர்கள் தள்ளுமுள்ளு; மதுரை எஸ்.பி., கார் கண்ணாடி சேதம்; மாநாட்டு தேதி மாற்ற வந்தார் ஆனந்த்

த.வெ.க., தொண்டர்கள் தள்ளுமுள்ளு; மதுரை எஸ்.பி., கார் கண்ணாடி சேதம்; மாநாட்டு தேதி மாற்ற வந்தார் ஆனந்த்

மதுரை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை த.வெ.க., மாநாட்டை முன்கூட்டியே நடத்தக்கோரி போலீசார் தெரிவித்ததால், ஆக., 18 முதல் 21 க்குள் மாநாடு நடத்த பாதுகாப்பு கோரி கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், போலீஸ் எஸ்.பி., அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். உடன் வந்த தொண்டர்களின் தள்ளுமுள்ளுவால் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த எஸ்.பி., அரவிந்தின் காரின் 'ரியர் வியூ' கண்ணாடி சேதமடைந்தது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள், த.வெ.க., கட்சித் தலைவர் விஜயின் திருமண நாள் என்பதால் ஆக., 25 ல் மதுரை பாரபத்தியில் 2வது மாநில மாநாடு நடத்த தேதி குறிக்கப்பட்டது. ஜூலை 16 ல் பாரபத்தியில் உள்ள 500 ஏக்கர் காலியிடத்தில் பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தகால் நடப்பட்டது. அதேநாளில் போலீஸ் எஸ்.பி., அலுவலகம் சென்ற ஆனந்த், மாநாடுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி நாளில் (ஆக.,27) பாதுகாப்பு பணிகளுக்கக போலீசார் அதிகளவில் செல்வதால் ஆக.,18 முதல் 22 க்குள் ஏதாவது ஒரு தேதியில் மாநாடு நடத்தலாம் என, சென்னையில் உள்ள த.வெ.க., அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் மீண்டும் குறிப்பிட்ட தேதிக்குள் மாநாடு நடத்துவதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி புதிய மனு அளிக்க நேற்று மதுரை எஸ்.பி., அலுவலகத்திற்கு ஆனந்த் வந்தார். எஸ்.பி., அறை முதல் தளத்தில் இருந்ததால் தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என ஆனந்த் உத்தரவிட்ட போதும், அவரை மதிக்காத தொண்டர்கள் எஸ்.பி., அறை முன்பாக குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை எச்சரித்து கீழ்த்தளத்திற்கு அனுப்பினர். எஸ்.பி.,யிடம் மனு கொடுத்த பின் ஆனந்த் கூறியதாவது: மாநாடு தேதி குறித்து த.வெ.க., தலைவர் விஜய் முடிவு செய்து அறிவிப்பார், என்றார். பின்னால் வந்த தொண்டர்கள் கூட்டம் அவரை இடித்து தள்ளியதில் தடுமாறினார். எஸ்.பி., காரை ஆனந்த் கடந்து சென்றபோது, தொண்டர்கள் தள்ளுமுள்ளுடன் காரை கடந்ததால் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி (ரியர் வியூ) உடைந்தது. போலீசார் அதை பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல் மறைத்து அப்புறப்படுத்தினர். ஆனந்தும் கண்டு கொள்ளாமல் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை