பெட்டிகள் வரிசை குழப்பம் காரணமாக துாத்துக்குடி - மைசூரு ரயில் தாமதம்
மதுரை : பெட்டிகளின் வரிசையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் துாத்துக்குடி - மைசூரு விரைவு ரயில் நேற்று (நவ. 17) துாத்துக்குடியில் இருந்து 49 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.துாத்துக்குடி - மைசூரு இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16235), ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் என மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது.இதில் 2 பொதுப் பெட்டிகளும் ரயிலின் ஒரே பக்கத்தில் இணைக்கப்பட்டதால் எந்தப் பக்கம் அப்பெட்டிகள் இருக்கிறது என தெரியாமல் பயணிகள் ஸ்டேஷனில் அலைவதால் ரயிலை தவறவிடும் நிலை இருந்தது. இதனால் ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டியான 'பி3', ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டியான 'எஸ் 2' அகற்றப்பட்டு, கூடுதலாக 2 பொதுப் பெட்டிகள் ரயிலின் மற்றொருபுறம் சேர்க்கப்பட்டன.இந்நிலையில் நேற்று இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் சிலருக்கு, அகற்றப்பட்ட 'பி3', 'எஸ்2' பெட்டிகளில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பயணிகள் ஸ்டேஷன் சென்று பார்த்தபோது அப்பெட்டிகள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து டிக்கெட் கட்டணத்தை திரும்ப அளிப்பதாக உறுதியளித்தனர். இதனால் துாத்துக்குடியில் இருந்து மாலை 5:15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 49 நிமிடங்கள் தாமதமாக 6:04 மணிக்கு புறப்பட்டது.மதுரையில்40க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மேற்கண்ட பெட்டிகளில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர். ரயில்வே நிர்வாகம் கூறுகையில் 'கணினியில் தவறாக பதிவேற்றப்பட்டதாலும், தகவல்கள் புதுப்பிக்கப்படாததாலும்இத்தவறு நிகழ்ந்தது. கடைசி நிமிடத்தில் கவனம் பெற்றதால் மாற்று பெட்டிகளையும்ஏற்பாடு செய்ய முடியவில்லை.மேற்கண்ட பெட்டிகளில் சீட் ஒதுக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படும்' என்றனர்.